VIDEO: ‘அசுர வேகத்தில் அடித்த பந்து’!.. பாதியிலேயே வெளியேறிய ராயுடு.. என்ன ஆச்சு அவருக்கு..? வெளியான ‘X-Ray’ ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பட்டி ராயுடுவுக்கு காயம் ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினார்.
இரண்டாம் கட்ட ஐபிஎல் (IPL) தொடரின் 30-வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (CSK), பொல்லார்டு (தற்காலிக கேப்டன்) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் (MI) மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டு பிளசிஸும் களமிறங்கினர்.
ஆனால் போட்டியின் ஆரம்பமே சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே டு பிளசிஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய மொயில் அலியும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அம்பட்டி ராயுடு (Ambati Rayudu) களமிறங்கினார். அப்போது மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை அம்பட்டி ராயுடு எதிர்கொண்டார். ஆனால் பந்து எதிர்பாராத விதமாக அம்பட்டி ராயுடுவின் கையில் பலமாக தாக்கியது. இதனால் வலியால் துடித்த அவரால், தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து பாதியிலேயே அம்பட்டி ராயுடு வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அப்போது 6-வதாக களமிறங்கிய கேப்டன் தோனி கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஸ்கோர் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது.
இந்த சமயத்தில் பும்ரா வீசிய 17-வது ஓவரில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து ஜடேஜா (26 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் பிராவோ 8 பந்தில் 23 ரன்கள் அடித்து அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தாலும், மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (88* ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்தது.
இதனை அடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஆனால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்தது. அதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதில் மும்பை அணியின் சௌரப் திவாரி மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், வரும் 24-ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. இதனிடையே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த அம்பட்டி ராயுடு இப்போட்டியில் விளையாடுவாரா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
— Simran (@CowCorner9) September 19, 2021
(Video Credit: BCCI/IPL) pic.twitter.com/WBDIIDuJWh
— The sports 360 (@Thesports3601) September 19, 2021
இதற்கு சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் (Stephen Fleming) விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘அம்பட்டி ராயுடுவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு உடனே எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. நல்லவேளையாக எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார்’ என தெரிவித்துள்ளார்.
அதேபோல் பீல்டிங்கின் போது சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தசைப்பிடிப்பு ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால் பெங்களூரு அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் தீபக் சஹார் விளையாடுவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்