கிழிஞ்ச ‘ஷூ’ போட்டு விளையாடிய இந்திய வீரர்.. இதுக்கு பின்னாடி இப்படியொரு ‘காரணம்’ இருக்கா..? ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கிழிந்த ஷூ அணிந்து விளையாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக இந்திய அணி விளையாடி வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 74 ரன்களை எடுத்தார். இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனைத் தொடர்ந்து 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 62 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது இடது காலில் கிழிந்த ஷூ அணிந்துகொண்டு விளையாடினார். இதனை கவனித்த கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கினர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘கிழிந்த ஷூவை அவர் அணிந்து விளையாடுவது அவரது ஆட்டத்தின் வியூகம் என்று சொல்லலாம். பந்தை ரிலீஸ் செய்யும் போது சரியான லேண்டிங் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஷமி அதை செய்துள்ளார். அவர் “HIGH ARM” பவுலிங் ஆக்சனில் பந்துவீசுபவர். அதனால் பந்தை ரிலீஸ் செய்யும்போது எந்த இடர்பாடும் ஏற்படக்கூடாது என்பதற்காக இதைச் செய்திருக்கலாம்’ என அவர் விளக்கமளித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் அவரது சிறப்பான பந்துவீச்சால் எதிரணியை கட்டுக்குள் வைத்திருந்தார். மொத்தம் 17 ஓவர்கள் வீசிய ஷமி, 4 மெய்டின் ஓவர்கள் உட்பட 41 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்