தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. மூத்த வீரரை கை காட்டும் ஆகாஷ் சோப்ரா.. வாய்ப்பு இருக்கா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாக வரவுள்ள வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26-ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பல புதிய வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. அதேவேளையில் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடிய சில வீரர்களை தவறவிட்டது. அதில் குறிப்பாக தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளசிஸை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. தற்போது அந்த அணிக்கு கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சிஎஸ்கே அணியின் ‘சின்ன தல’ என அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் இந்த முறை ஏலத்தில் எடுக்கவில்லை. அதனால் தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக யார் வருவார்கள் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக ஒருவரை வளர்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒரு சீசன் தொடங்கும்போது கேப்டனுக்கு உதவியாக ஒருவரை துணை கேப்டனாக நினைப்பது சுலபம். ஆனால் அவர்களால் போட்டி பற்றிய நுணுக்கங்களில் கேப்டனுக்கு உதவ முடிகிறதா என பார்க்க வேண்டும்.
அப்படி பார்க்கையில் ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் அணியை வழி நடத்துவதற்கான நிலையில் உள்ளனர். இதில் கேப்டன் தோனியை விட ஜடேஜா அதிக விலைக்கு சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார். அதனால் அடுத்த கேப்டனாக அவர் வர இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் அணி நிர்வாகம் இளம் வீரர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்க இதுவரை நினைக்கவில்லை என்றே தெரிகிறது’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்