‘இனி எகிறி குதிச்சு உள்ள போனா அவ்ளோதான்’!.. ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரை காண வரும் ரசிகர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்றது. ஐபிஎல் தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், தற்போதே வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை, அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
மேலும் வீரர்களின் பாதுகாப்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. அதன்படி வீரர்கள் அனைவரும் பயோ பபுலில் இருக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற வீரர்களுடன் கலந்துரையாடும் முன், சுமார் 20 வினாடிகள் சோப்பு கொண்டு கையை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ரசிகர்கள் யாரும் போட்டி நடைபெறும்போது மைதானத்துக்குள் நுழையாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. ஒருவேளை ரசிகர் யாராவது மைதானத்துக்குள் வந்து வீரர் யாரையாவது தொட்டுவிட்டால், உடனே அந்த ரசிகர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதேபோல் அந்த வீரரும் உடனடியாக அந்த உடையை மாற்ற வேண்டும் என்றும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்