பொல்லார்ட் சார் எங்க இருக்கீங்க.. இங்க உங்க பிரண்ட் டுவைன் பிராவோ செஞ்ச சேட்டைய பாருங்க! பறந்த மெசேஜூம் பதிலும்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமே.இ.தீவுகள் அணியின் கேப்டன் "கிரன் பொல்லார்டை காணவில்லை" என்ற போஸ்டரை பகிர்ந்து டுவைன் பிராவோ பொல்லார்டை கலாய்த்துள்ளார்.
தேவையான நேரத்தில் ஆல்ரவுண்டர் அவதாரம் எடுக்கும் பிராவோ மே.இ.தீவுகள் அணியின் மிகப்பெரிய பலமாக இருந்தார். மே.இ.தீவுகள் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றிய அணியில் இடம் பெற்றிருந்த பிராவோ அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். டி20 போட்டிகளில் டெத் பவுலர் என்று வர்ணிக்கப்படும் பிராவோ, மே.இ.தீவுகள் அணிக்காக 85 டி20 போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளையும், 1,229 ரன்களையும் குவித்துள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் 2,968 ரன்களும் 199 விக்கெட்டுகளையும், 40 டெஸ்ட் போட்டிகளில் 2,200 ரன்களும் 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
நடனத்தில் அசத்தும் பிராவோ
சர்வதேசப் போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும், லீக் போட்டிகளில் பிராவோ தொடர்ந்து விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பிராவோ, அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதுமட்டுமல்ல களத்தில் நடனமாடுவது, வேடிக்கையான பேச்சு, நடவடிக்கைகளுக்கும் பேர் போனவர் பிராவோ. அண்மையில் வெளிவந்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாட்டிற்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு அசத்தினார்.
பிராவோ - பொல்லார்டு
இந்நிலையில், சக நாட்டு வீரர் கிரன் பொல்லார்டை காணவில்லை என்று சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டது ரசிகர்களை குழப்பம் அடைய வைத்துள்ளது. நட்சத்திர வீரர்களாக வலம் வருபவர்கள் பொல்லார்டு, டுவைன் பிராவோ ஆவர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். மைதானத்தில் எதிர் எதிர் அணியில் விளையாடினாலும் ஒருவரை ஒருவர் கிண்டல், கேலி செய்து ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளனர்.
"பொல்லார்டை காணவில்லை"
பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இது உண்மையிலேயே ஒரு சோகமான நாள் நண்பர்களே. எனது சிறந்த நண்பர் கிரன் பொல்லார்டை காணவில்லை நண்பர்களே. உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் தயவு செய்து எனக்கு இன்பாக்ஸ் செய்யவும், அல்லது போலீசில் புகார் செய்யவும்" என்றும் அதனுடன் சிரித்த படங்களை சேர்த்து பகிர்ந்துள்ளார்.
இதற்கு, சக கிரிக்கெட் வீரர்கள் டேரன் சம்மி , "நல்ல நண்பன்" என்று பதில் கூறியுள்ளார். மேலும், கிரன் பொல்லார்டு, "இதுதான் உண்மையான நட்பு" என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த தமிழக ரசிகர் ஒருவர், மாநாடு பட பாணியில் "நோ தலைவரே... நோ தலைவரே" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்