'ஐபிஎல் நடக்கும் போது... என்னையும் 'நிறத்தை' வைத்து கிண்டல் செய்தார்கள்!'.. இனவாதம் குறித்து டேரன் சமி பகிரங்க குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் விளையாடும்போது தானும் இனவாதத்திற்கு ஆளானதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டேரென் சமி தெரிவித்துள்ளார்.

'ஐபிஎல் நடக்கும் போது... என்னையும் 'நிறத்தை' வைத்து கிண்டல் செய்தார்கள்!'.. இனவாதம் குறித்து டேரன் சமி பகிரங்க குற்றச்சாட்டு!

அமெரிக்காவில் 46 வயது நிரம்பிய ஜார்ஜ் ஃப்ளையாட் என்பவர், கடந்த மே 25ஆம் தேதி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவலர்கள் அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்றதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அமெரிக்காவில் மிகப்பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்கு உலகின் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இனவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரென் சமி தானும் ஐபிஎல் போட்டியின்போது, இனவாதத்திற்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது தன்னையும், இலங்கை வீரர் பெராராவையும் சிலர் 'கலு' என்று அழைத்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போது அந்த வார்த்தைக்கு அர்த்தம் 'கறுப்பு நிறத்தைச் சேர்ந்த வலுவான நபர்' என நினைத்துக் கொண்டிருந்ததாகவும், பின்னர் அது கறுப்பினத்தைக் கிண்டல் செய்து கூறப்பட்ட வார்த்தை எனத் தெரிந்து வருந்தியதாகவும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ள அவர், ஐசிசி மற்றும் மற்ற விளையாட்டு ஆணையங்கள் அனைத்தும் தன்னைப் போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் தன்னை போன்றவர்களுக்கு நடக்கும் அநீதியைப் பற்றிப் பேசுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மட்டும் இனவாதம் இல்லை என்றும், இது தினந்தோறும் நடப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இது அமைதிக் காக்க வேண்டிய நேரமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்