‘முதல் போட்டியே தோல்வி’!.. நான் அப்பவே கேட்டேன், ஆனா கேப்டன்தான் ‘வெய்ட்’ பண்ண சொல்லிட்டாரு.. புலம்பும் இலங்கை வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து இலங்கை வீரர் கருணாரத்னே விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் மினோட் பானுகா களமிறங்கினர். ஆரம்பமே இந்த ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தது. இதில் 33 ரன்கள் அடித்திருந்தபோது சஹால் ஓவரில் அவிஷ்கா பெர்னாண்டோ அவுட்டாகினார். இதனை அடுத்து 22 ரன்களில் மினோட் பானுகாவும் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் நிலைத்து ஆடாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி பறிகொடுத்தது. இந்த சமயத்தில் 8-வது வீரராக களமிறங்கிய கருணாரத்னே, 43 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை இலங்கை அணி எடுத்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 36.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகார் தவான் 86 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் இளம் வீரர்கள் பிரித்வி ஷா 43 ரன்களும், இஷான் கிஷன் 59 ரன்களும் அடித்து அசத்தினார். இப்போட்டியில் வெற்றி அடைந்ததன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இலங்கை வீரர் கருணாரத்னே விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘இந்தியா ஒரு சிறந்த அணி, அவர்கள் நிச்சயம் எங்களை அட்டாக் செய்வார்கள் என்று தெரியும். அதனால் ஆரம்பத்திலேயே விக்கெட் எடுத்திருந்தால், அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் பவர் ப்ளேவில் 1 விக்கெட் மட்டுமே எங்களால் எடுக்க முடிந்தது. அப்போது 2 அல்லது 3 விக்கெட் எடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றியிருக்க முடியும்’ என கருணாரத்னே கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘எங்களது பேட்ஸ்மேன்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் அதை பெரிய இன்னிங்ஸ்ஸாக அவர்களால் மாற்ற முடியவில்லை. 42-வது ஓவரில் கேப்டன் ஷானாகாவுடன் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, பெரிய ஷாட்கள் அடித்து விளையாடட்டுமா? என கேட்டேன். ஆனால், அவர் 45-வது ஓவர் வரை காத்திருக்க சொன்னார். எங்கள் பேட்ஸ்மேன்கள் அதிக நேரம் பேட்டிங் செய்திருந்தால், ஒரு பெரிய ஸ்கோருக்கு சென்றிருக்கலாம். எங்களால் 300 முதல் 350 ரன்கள் வரை அடிக்க முடியும். இந்த முறை தவறவிட்டாலும், அடுத்த முறை அதிக ஸ்கோர் அடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது’ என கருணாரத்னே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை (20.07.2021) கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்