Video: ஜடேஜா 'ரன்' அவுட்... அவரு 'இப்படி' செய்யலாமா?... கோபத்தில் கொந்தளித்த 'கோலி'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 2-வதாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

Video: ஜடேஜா 'ரன்' அவுட்... அவரு 'இப்படி' செய்யலாமா?... கோபத்தில் கொந்தளித்த 'கோலி'

நேற்று இந்திய அணி பேட்டிங் செய்தபோது போட்டியின் 48-வது ஓவரில் ஜடேஜாவை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமோ பால் ரன் அவுட் செய்தார். முதலில் இதை களத்தில் இருந்த அம்பயர் ஷான் ஜார்ஜ் ரன் அவுட் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால் ரீ-பிளேயில் அந்த ரன் அவுட் தெளிவாக தெரிந்தது. இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் கள நடுவர் ஷான் ஜார்ஜிடம் முறையிடவே, அவர் மூன்றாவது நடுவர் முடிவுக்கு விட்டார்.

அதன்பின்னர், ஜடேஜா அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டு வெளியேறினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடும் கோபமடைந்த கோலி இருக்கையில் இருந்து எழுந்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் போட்டியின் முடிவில் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''பீல்டர் கேட்கும் போது, நடுவர் நாட்-அவுட் என்கிறார். அத்துடன் அந்த விஷயம் முடிந்து விட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு டி.வி. ரீப்ளேயில் பார்த்து விட்டு அப்பீல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மைதானத்துக்கு வெளியே டெலிவி‌ஷனில் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் நடுவரின் முடிவில் எப்படி தலையிட முடியும். கிரிக்கெட்டில் இது போன்று நிகழ்ந்ததை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை,'' என்றார்.

அதுநேரம் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்,''என்னைப் பொறுத்தவரை இறுதியில் சரியான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் முக்கியம். நாங்கள் முதலில் அப்பீல் செய்தபோது நடுவர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இறுதியில் சரியான முடிவு எடுக்கப்பட்டது,'' என தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.