"'ஐபிஎல்' நடந்த சமயத்துல.. அத எல்லாம் பாக்கவே பயங்கரமா இருந்துச்சு.. நான் எல்லாம் மனசு உடைஞ்சு போயிட்டேன்.." வேதனையில் புலம்பிய 'வார்னர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், பயோ பபுள் விதிகளையும் மீறி, சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அந்த சமயத்தில், இந்தியாவிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு, உச்சத்தில் இருந்தது. இதனிடையே, மீதமுள்ள போட்டிகள், இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரையிலான சமயத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்தது. மேலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நிறுத்தப்பட்ட சமயத்தில், அனைத்து அணிகளிலும் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள், தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர்.
ஆனால், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு, தங்களது நாட்டிலுள்ள கொரோனா விதிமுறைகளின் காரணமாக, நேரடியாக தங்களது நாட்டிற்குச் செல்ல முடியவில்லை. இதனால், இந்தியாவில் இருந்து மாலத்தீவு சென்ற அவர்கள், 14 நாட்கள் குவாரன்டைன் முடிந்த பிறகு, ஆஸ்திரேலியா சென்று மீண்டும் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இத்தனையும் முடித்துக் கொண்டு, சில தினங்களுக்கு முன்பு தான், ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்தனர். இந்நிலையில், ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (David Warner), ஐபிஎல் சமயத்தில், இந்தியாவில் தான் சந்தித்த திகிலூட்டும் அனுபவம் பற்றி தற்போது மனம் திறந்துள்ளார்.
'இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை டிவி வழியாக நாங்கள் பார்த்த போது, மிகவும் வேதனையாக இருந்தது. நாங்கள் ஐபிஎல் போட்டிகள் ஆடுவதற்காக, மைதானத்திற்கு செல்லும் போது, வழியில் தங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்களுடன் மக்கள் வரிசையில் நிற்பதை பார்க்க முடிந்தது. அதை பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தது. ஒரு மனிதாபிமான பார்வையில், அது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது' என வார்னர் மிகவும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது சிறந்த முடிவு தான் என்றும் வார்னர் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.
மற்ற செய்திகள்