‘இது ஒன்னும் இந்தியா கிடையாது பேட்டை தாறுமாறாக சுத்த’!.. ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரர் சொன்ன காட்டமான அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெளிநாட்டு மைதானங்களில் பொறுமையாக ஆட வேண்டும் என இந்திய அணியின் இளம்வீரர் ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 49 ரன்களும், கேப்டன் விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர்.
ஆனால் ரஹானே அவுட்டான பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் ரிஷப் பந்த் 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய அவர், திடீரென விளாச நினைத்து டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன், ரிஷப் பந்துக்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். இதுகுறித்து Star Sports சேனலில் பேசிய அவர், ‘இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பந்துக்கு என்ன சவால் காத்திருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். அவர் இயல்பாகவே ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். ஆனால் இந்த மாதிரி மைதானத்தில் எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். எந்தெந்த பவுலர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். பொறுமையையும், கட்டுக்கோப்பையும் விட்டு விடக்கூடாது’ என விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தியாவை போல் இங்கு பேட்டை தாறுமாறாக சுழற்ற முடியாது. ஆனால் ரிஷப் பந்த் இதைத்தான் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் நிச்சயம் அவர் கற்றுக் கொள்வார். அவர் அவுட்டாகி செல்லும்போது, தன் மீது கடும் கோபமும், ஏமாற்றமும் அடைந்தது பார்த்தோம். அவர் அந்த பந்தை அப்படி ஆடியிருக்க கூடாது, அதை அடிக்காமல் விட்டிருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் நிரூபித்ததுபோல், இங்கும் தன்னை ரிஷப் பந்த் நிரூபிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து மைதானங்கள் ஆஸ்திரேலியா போல் இருக்காது. இங்கு நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். குறிப்பாக பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்து நன்றாக ஸ்விங் ஆகும். அப்போது நிதானித்துதான் ஆட வேண்டும்’ என விவிஎஸ் லக்ஷ்மண், ரிஷப் பந்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மற்ற செய்திகள்