கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் அசத்தலான Photo'வுடன் வைரலாகும் கோலியின் ட்வீட்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி 20 தொடரை 2 - 1 என்ற கணக்கில், இந்திய அணி வென்றிருந்தது. தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணிகள், தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, நாளை (17.07.2022) நடைபெற உள்ள நிலையில், இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால், கடைசி ஒரு நாள் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனிடையே, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஃபார்ம் அவுட் தான், தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு பேசு பொருளாக மாறி உள்ளது. சமீப காலமாகவே ரன் அடிக்க கடுமையாக திணறி வரும் விராட் கோலி, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், 20 ரன்களுக்கு மேல் அடிக்கவும் மிகப்பெரிய அளவில் அவர் திணறி வருகிறார்.
இதனால், பல முன்னாள் வீரர்களும் அடுத்த சில தொடர்களில் கோலி ஓய்வெடுக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் கோலிக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், அதே வேளையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோலிக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வட்டாரத்தில் தொடர்ந்து கோலி பற்றி கருத்து எழுந்து வரும் நிலையில், தற்போது கோலி பகிர்ந்துள்ள ட்வீட், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தனது ட்விட்டர் தளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள விராட் கோலி, தன்னுடைய கேப்ஷனில், "Perspective" என குறிப்பிட்டுள்ளார். அதே போல, கோலியின் புகைப்படத்தில், அவரது பின்னால் இருக்கும் பலகை ஒன்றில், "நான் விழுந்தால் என்ன ஆகும்?" என ஒரு பக்கத்தில் குறிப்பிடப்பட, அதனைத் தொடர்ந்து, "ஆனால் நான் பறந்தால் என்ன செய்வது?" என்ற வாக்கியமும் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, அதிக போராட்டங்களை சந்திக்கும் ஒருவரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த வாக்கியம் இடம் பெற்றுள்ளது. அவர் கேப்ஷனில் குறிப்பிட்ட 'Perspective' என்பதும், தன்னுடைய பார்வையில் என்பதாக பொருள் தருகிறது.
இதனால், தனது ஃபார்ம் பற்றிய விமர்சனம் குறித்து, மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார் என அவரது பதிவில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்