என்னங்க சொல்றீங்க..! கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி ‘விலக’ போறாரா..? சர்ச்சைக்கு ‘முற்றுப்புள்ளி’ வைத்த பிசிசிஐ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இனி பேட்டிங்கில் கவனம் செலுத்த இருப்பதாகவும், அதற்கு கேப்டன் பொறுப்பு சுமையாக இருப்பதாக கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை இந்திய அணிக்காக 95 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள கோலி, அதில் 65 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். அதேபோல் 45 டி20 போட்டிகளில் 27-ல் வெற்றியை தேடி தந்துள்ளார். ஆனால் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் ஒருமுறை கூட கோலியின் தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதில்லை. இதுதான் அவர் மீது வைக்கப்படும் பெரிய விமர்சனமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவியது. அதனால் அப்போது அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மேலும் அணி தேர்விலும் கோலி தடுமாறுவதாகவும் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக விராட் கோலி முடிவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ‘கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து கோலியே அறிவிப்பை வெளியிடுவார். அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறார். உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற தனது பழைய ஃபார்மை மீட்க கோலி விரும்புகிறார்’ என பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை ரோஹித் ஷர்மா ஏற்பார் என சொல்லப்பட்டது. விராட் கோலி இல்லாத சமயங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ள ரோஹித் ஷர்மா, 10 ஒருநாள் போட்டிகளில் 8 வெற்றியும், 19 டி20 போட்டிகளில் 15 வெற்றியும் பெற்றுள்ளார்.
குறிப்பாக இலங்கையில் நடந்த நிதாகஸ் டிராபியை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை கைப்பற்றி அசத்தியது. மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து சிறப்பாக வழி நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கேப்டன் சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், ‘இது முற்றிலும் வதந்தி. கேப்டன் பொறுப்பு குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை. மூன்று பார்மெட்டுக்கும் கோலிதான் கேப்டனாக இருப்பார்’ என கேப்டன் சர்ச்சைக்கு அருண் துமால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மற்ற செய்திகள்