‘ரொம்ப கேவலமான செயல்’!.. இப்படி பேசுறவங்கெல்லாம் ‘முதுகெலும்பு’ இல்லாதவங்க.. விட்டு விளாசிய கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை மதரீதியாக அவதூறு பரப்பியவர்களுக்கு கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. அப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைவது இதுதான் முதல்முறை.
அதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள், இந்திய வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதில் சிலர், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (Mohammed Shami) மீது மதரீதியாக அவதூறு பரப்பினர். இது பெரும் சர்ச்சையாகவே, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி (Virat Kohli), ‘ஒருவரை மதரீதியாக மோசமாக பேசுவது கேவலமான செயல். நேருக்குநேர் நின்று பேச தைரியம் இல்லாத முதுகெலும்பற்றவர்கள் தான் சமூக வலைதளங்களில் தங்களது தைரியத்தை வெட்கம் இல்லாம காட்டி வருகின்றனர். இங்கு எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதற்காக ஒருவரை மதரீதியாக தாக்கிப் பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
முகமது ஷமி இந்திய அணிக்கு பல முறை வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முதன்மை பவுலராக இருந்து வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு மிகவும் பெரியது. அதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல், அவதூறு பரப்புவர்களுக்காக என் வாழ்நாளில் ஒரு நிமிடத்தைக் கூட செலவிட விரும்பவில்லை.
இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் முகமது ஷமிக்கு துணையாக இருப்போம். அவரை காயப்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் இன்னும் சற்று தீவிரமாக முயற்சி செய்யுங்கள். ஆனால், எங்களின் சகோதரத்துவம், நட்புக்கு முன்பு யாரையும் அசைத்துக் கூட பார்க்க முடியாது. இந்திய அணியில் எந்தவித பாகுபாடும் இல்லை என ஒரு கேப்டனாக என்னால் உறுதியாக கூறமுடியும்’ என விராட் கோலி ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளார்.
மற்ற செய்திகள்