"இது 'செட்' ஆகாது... சீக்கிரம் ஒரு முடிவ எடுங்க..." இதென்னடா 'கோலி'க்கு வந்த சோதனை??... 'பரபரப்பு' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருந்தது.
22 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ள அதே வேளையில், கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக 4 டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வி கண்டுள்ளது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி கேப்டன் கோலி சில தவறான முடிவுகளை எடுத்ததாக விமர்சனம் எழுந்தது. டெஸ்ட் போட்டியில், அனுபவம் வாய்ந்த குல்தீப் யாதவை அணியில் களமிறக்காமல், அதிக அனுபவமில்லாத சுழற்பந்து வீச்சாளர் நதீமை கோலி கொண்டு வந்தார். அவரது பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இங்கிலாந்து அணி எளிதில் ரன்களை குவித்தது.
இந்நிலையில், கோலி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மாண்டி பனேசர், 'கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து நெருக்கடியில் உள்ளது. அடுத்த போட்டியிலும் இந்திய அணி கோலி தலைமையில், தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வியை சந்தித்தால், கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என நான் நினைக்கிறேன்.
ரஹானே தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபித்ததில் இருந்து கோலிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால், இந்த தொடர், கோலிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதால் அந்த அணி அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறது. இது இந்திய அணிக்கு மேலும் சிக்கல் தான்' என பனேசர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி இருந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், அதன் பிறகு இரண்டு போட்டிகளை ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது. அப்போது முதலே, இந்திய டெஸ்ட் அணிக்கு ரஹானே தலைமையேற்க வேண்டும் என பலர் தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், முன்னாள் வீரர் வெளிப்படையாக கோலி குறித்து சொன்ன கருத்து, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்