'ஃபீல்டிங் மட்டும் கொஞ்சம் மிஸ்ஸிங்!'... 'இன்றைய போட்டி குறித்து கோலியின் கருத்து'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு டஃப் கொடுத்தது.
சவாலான டார்கெட்டை நோக்கி, இரண்டாவதாக பேட்டிங் ஆடிய இந்திய அணி, நியூசிலாந்து பவுலர்களின் பந்தை நாலாப்பக்கமும் சிதறடித்தனர். கே.எல். ராகுல் 56(27), விராட் கோலி 45(32), ஸ்ரேயாஸ் ஐயர் 58(29) ரன்கள் அடித்து, 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை எளிதில் சென்றடையும் ஏவுகணைகளாக திகழ்ந்தனர்.
போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் விராட் கோலி, "நாங்கள் போட்டியை நன்றாக அனுபவித்து மகிழ்ந்தோம். நியூசிலாந்து வந்து சேர்ந்த இரண்டு நாட்களிலேயே முதல் போட்டியை விளையாடியுள்ளோம். எங்களுக்கு சிறந்த வரவேற்பு இருந்தது. 80 சதவீதம் இந்திய ரசிகர்கள் இருந்தது நல்ல சூழ்நிலையை கொடுத்தது. 200-க்கும் அதிகமான இலக்கை துரத்தி விளையாடும் போது, ரசிகர்களின் உற்சாகம் தேவையாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
மேலும், "பந்துவீச்சு ஓவரின் போது மிடில் ஆர்டர் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். பீல்டிங் ஒன்றுதான் நாங்கள் சரிசெய்ய வேண்டிய விஷயம் என நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.