‘ஆமா.., இனிமேல் இது தொடரும்’!.. ‘அப்படி போடு சரவெடியை’.. போட்டி முடிந்தபின் ‘ஹேப்பி’ நியூஸ் சொன்ன கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற பின் டி20 உலகக்கோப்பை குறித்து சூசகமாக பதிலளித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் கேப்டன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.
ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். அதில் ரோஹித் ஷர்மா 64 ரன்கள் எடுத்திருந்தபோது பென் ஸ்டோக்ஸின் ஓவரில் போல்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, இங்கிலாந்து பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதில், தான் பங்குக்கும் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசிய சூர்யகுமார், 32 ரன்கள் எடுத்திருந்தபோது ஆதில் ரஷித் ஓவரில் ஜேசன் ராயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா-விராட் கோலி கூட்டணி, இங்கிலாந்து பந்துவீச்சை பந்தாடியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை இந்திய அணி குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 80 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் 17 பந்துகளில் 39 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்ட்யாவும் கடைசி வரை களத்தில் இருந்தார்.
இதனை அடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் போட்டி முடிந்தபின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது குறித்து கேப்டன் விராட் கோலியிடம் கேள்வி எழுப்பட்டது. அப்போது பேசிய அவர், ‘ஆம். நான் ஐபிஎல் தொடரிலும் தொடக்க ஆட்டக்காரராகவே களமிறங்க உள்ளேன். சில காலம் நான் வெவ்வேறு ஆர்டரில் விளையாடினேன். தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் சரியாக அமைந்துள்ளது என எனக்கு தோன்றுகிறது. அதனால் ரோஹித் ஷர்மாவுடன் டாப் ஆர்டரில் டி20 உலகக்கோப்பை வரை விளையாட உள்ளேன். ஏனென்றால் எங்களது ஓப்பனிங் பாட்னர்ஷிப் சரியாக அமைந்துவிட்டது’ என விராட் கோலி தெரிவித்தார்.
முன்னதாக இந்த டி20 தொடரின் முதல் 4 போட்டிகளில் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அதில் முதல் போட்டியில் 1 ரன், அடுத்த இரண்டு போட்டிகளில் டக் அவுட் (0), 4-வது போட்டியில் 14 ரன்களில் ராகுல் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கடைசி டி20 போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன், விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இவர்கள் இருவரது பார்டனர்ஷிப்பை முன்னாள் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்