‘கனவிலும் நினைத்துப் பார்க்காத’... ‘டீன் ஏஜில் துவங்கிய’... விராட் கோலியின் உருக்கமான பதிவு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதனது 11 வருட சர்வதேச கிரிக்கெட் பயணம் குறித்து, இந்திய கேப்டன் விராட் கோலி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான சர்வதேசப் போட்டியில் கடந்த 2008-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி கிரிக்கெட் உலகில் அறிமுகம் ஆனார். இதையடுத்து கிரிக்கெட் உலகில் 2019, ஆகஸ்ட் 18-ஆம் தேதியுடன் விராட் கோலி 11 வருடங்களை கடந்துள்ளார். இதை நினைவு கூறும் விதமாக விராட் கோலி, தனது ட்விட்டரில் உணர்ச்சிபூரமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘இதே நாளில் 2008-ஆம் ஆண்டு இளம் வயதில் (டீன் ஏஜ்) 11 ஆண்டுகளுக்கு முன்னர் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தேன். கடவுளிடம் இருந்து இத்தனை பெரிய ஆசிர்வாதம் கிடைக்கும் என கனவு கூட கண்டதில்லை. நீங்கள் அனைவரும் சரியான பாதையில் சென்று பெரும் வெற்றி பெற அனைத்து சக்திகளும் கிடைக்கட்டும்’ என்று விராட் கோலி பதிவிட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள விராட் கோலி, பல எண்ணற்ற சாதனைகளை படைத்து வருகிறார். மேலும் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். 2008-ம் ஆண்டு எடுத்த புகைப்படம் மற்றும் தற்போது எடுத்த புகைப்படம் இரண்டையும் அவர் அதில் பகிர்ந்துள்ளார்.
இதனிடையே, விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 11 ஆண்டுகளை நிறைவு செய்ததை கவுரவிக்கும் வண்ணம், டெல்லியில் உள்ள பெரோஷ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு (மைதானத்தின் குறிப்பிட்ட இருக்கைகள் அமைந்துள்ள பகுதி) அவரது பெயரை சூட்டியுள்ளது டெல்லி கிரிக்கெட் சங்கம்.
From starting as a teenager on the same day in 2008 to reflecting on the journey 11 years after, I couldn't have dreamt of the blessings God has showered me with. May you all get the strength and power to follow your dreams and always follow the right path. 🇮🇳🙏😇#forevergrateful pic.twitter.com/sTZ7tKEoMz
— Virat Kohli (@imVkohli) August 19, 2019