அப்போ தோனி எடுத்த ‘முடிவை’ ஏன் கோலி எடுக்கல? டீம் மேல அவருக்கு அக்கறை இல்லையா?.. ‘கம்பேர்’ பண்ணி தாக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்துக்கு விடுப்பு எடுத்ததை தோனியுடன் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அப்போ தோனி எடுத்த ‘முடிவை’ ஏன் கோலி எடுக்கல? டீம் மேல அவருக்கு அக்கறை இல்லையா?.. ‘கம்பேர்’ பண்ணி தாக்கும் ரசிகர்கள்..!

ஐபிஎல் தொடரின் 13-வது சீசன் முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17ம் தொடங்க உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி என்பதால், இதில் வெற்றி பெற்று புள்ளிகள் பெறுவது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இந்த முறை அதை தக்க வைக்க முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எளிதாக வென்றது. அந்த தோல்விக்கு பழி தீர்க்க ஆஸ்திரேலியா காத்துக் கொண்டுள்ளது. இந்தநிலையில் கேப்டன் விராட் கோலியின் விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார். அடுத்த மூன்று போட்டிகளில் இருந்து அவர் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். அவரது மனைவிக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளதால் இந்த கோலி விடுப்பை எடுத்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் வீரர்கள் சிலர் கூறுகையில், விராட் கோலி இந்திய அணியை கை விட்டுள்ளார். அவர் இல்லாத இந்திய அணி நிச்சயம் ஆஸ்திரேலியாவில் தடுமாறும் என கூறி உள்ளனர். அதே சமயம், சிலர் கோலியின் முடிவை ஆதரித்து, குடும்பமும் முக்கியம் தான் என கூறி வருகின்றனர்.

இதில் ரசிகர்கள் தோனியுடன், கோலியை ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளனர். கடந்த 2015 உலகக்கோப்பை தொடரின் போது தோனிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அதற்கு தோனி விடுப்பு எடுத்து செல்லவில்லை. அப்போது தோனியிடம் இதுகுறித்து எழுப்பட்ட கேள்விக்கு, ‘நான் நாட்டு பணிக்காக வந்துள்ளேன். அதனால் சில விஷயங்களுக்கு பொறுமையாக காத்திருக்கத்தான் வேண்டும்’ என பதிலளித்திருந்தார். அந்த தொடர் முடிந்த பின் தான் தோனி தனது குழந்தையை பார்த்தார். இதை சுட்டிக் காட்டி கோலியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய தொடருக்கான அணித் தேர்வுக்கு பின் விராட் கோலி விடுப்பு கேட்டுள்ளதால், இந்திய அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யாரை கோலிக்கு பதில் ஆட வைப்பது? அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவாரா? அல்லது வேறு யாரையும் பிசிசிஐ தேர்வு செய்யுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னதாக ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது அவர் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் போட்டிகளில் விளையாடுவாறா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்கையில், இந்திய டி20 அணிக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக போட வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்