"அவரு டீமுக்கு கிடைச்ச சொத்து, அதுவும் இந்த நேரத்துல"... 'நடராஜனை வைத்து கோலி போடும் பிளான்?!!'... 'போட்டிக்குப்பின் கிடைத்த ஸ்பெஷல் பாராட்டு!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடி அசத்தி வரும் தமிழக வீரர் நடராஜன் குறித்து கேப்டன் விராட் கோலி மிகவும் பாராட்டி பேசியுள்ளார்.
இந்திய அணியில் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே 2 விக்கெட்டுகள் எடுத்து நம்பிக்கை கொடுத்த நடராஜன், அதன்பின் விளையாடிய முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகளும், நேற்று நடந்த கடைசி போட்டியில் ஒரு விக்கெட்டும் எடுத்து பாராட்டுகளை குவித்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடராஜன் குறித்து மிகவும் பாராட்டி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர், "நடராஜன் குறித்து இங்கு குறிப்பிட வேண்டும். இந்திய அணியில் ஷமி, பும்ரா இரண்டு பேருமே இல்லாத மிகவும் கஷ்டமான சூழலில் நடராஜன் ஆடி தன்னை நிரூபித்துள்ளார். அவர் மீது பிரஷர் இருந்த சமயத்திலும் கூட தன்னை யார் என்று நிரூபித்துள்ளார்.
இதுதான் அவருக்கு முதல் சர்வதேச தொடர் எனும்போதும் அதற்கான அறிகுறியே அவரிடம் இல்லை. அவ்வளவு சிறப்பாக விளையாடியுள்ளார். நடராஜன் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தார். அவர் மிகவும் கடினமாக உழைக்க கூடிய வீரராக உள்ளார். அதோடு அவர் மிகவும் பணிவான குணம் கொண்டவராகவும் உள்ளார். அவருக்கு தான் என்ன செய்கிறோம் எனத் தெரிகிறது. நடராஜன் இதே போல தொடர்ந்து தன்னை மெருகேற்றிக்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும்.
இடதுகை பவுலர்கள் எப்போதும் ஒரு அணிக்கு சொத்து போன்றவர்கள். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடக்க உள்ள சூழலில் நடராஜன் இதே போல ஆடினார் என்றால் சிறப்பாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடராஜனை அடுத்த ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக் கோப்பையில் களமிறக்க கோலி திட்டமிட்டு வருவது தெரிய வந்துள்ளது.
மற்ற செய்திகள்