இதோட கோலி 14 தடவை ‘டக் அவுட்’ ஆகியிருக்காரு.. ஆனா இப்படி ‘அவுட்’ ஆகுறது இதுதான் முதல் தடவை.. மோசமான ரெக்கார்டு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனது மூலம் விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இந்த கூட்டணி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் 29 ரன்கள் எடுத்திருந்த போது ஷிகர் தவான் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்த சமயத்தில் களமிறங்கிய விராட் கோலி 5 பந்துகளை எதிர்கொண்டு சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் வீசிய ஓவரில் டெம்பா பவுமாவிடம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து வந்த ரிஷப் பந்த் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 85 ரன்களை குவித்தார்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 22 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஷர்துல் தாகூர் மற்றும் அஸ்வின் கூட்டணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ஷர்துல் தாகூர் 40 ரன்களும், அஸ்வின் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதனால் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.
இந்த நிலையில் இப்போட்டியில் டக் அவுட் ஆனது மூலம் விராட் கோலி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 முறை விராட் கோலி அவுட் ஆகி உள்ளார். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ஓவரில் டக் அவுட் ஆவது இதுதான் முதல் முறை. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியும். இதுபோன்ற முக்கியமான போட்டியில் விராட் கோலி போன்ற மூத்த வீரர் டக் அவுட் ஆனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்