'விவகாரமான' ராபின்சனின் இனவெறி 'ட்வீட்'.. "யார் என்ன சொன்னாலும் சரி.. இது நடந்தே ஆகணும்.." தடாலடியாக சொன்ன 'வாகன்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இறுதி போட்டியில் இந்திய அணியை சந்திப்பதற்கு முன், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

'விவகாரமான' ராபின்சனின் இனவெறி 'ட்வீட்'.. "யார் என்ன சொன்னாலும் சரி.. இது நடந்தே ஆகணும்.." தடாலடியாக சொன்ன 'வாகன்'!!

இதன் முதல் போட்டி, ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், அந்த போட்டி டிராவானது. இந்த போட்டியில், இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இருந்த ஓல்லி ராபின்சன் (Ollie Robinson), முதல் சர்வதேச போட்டியிலேயே, கான்வே, வில்லியம்சன், டாம் லதாம் உள்ளிட்ட நியூசிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளுடன், மொத்தம் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார். அதே போல, முதல் இன்னிங்ஸில் 42 ரன்களும் எடுத்திருந்தார்.

ஆனால், ராபின்சன் அறிமுகமானதுமே இன்னொரு தலைவலியும் அவரைத் தேடி வந்தது. கடந்த 8  ஆண்டுகளுக்கு முன், இனவெறி மற்றும் பாலியல் ரீதியிலான பல கருத்துக்களை ராபின்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் அறிமுக போட்டியில் அசத்தி, ஒரு பக்கம் கிரிக்கெட் உலகில் முத்திரை பதிக்க, மறுபக்கம் அவரது பழைய ட்வீட்களும் வைரலாகி, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தனது பழைய ட்வீட்களுக்கு, மன்னிப்பையும் கோரியிருந்தார் ராபின்சன். இங்கிலாந்து வீரரின் செயல், கடும் விமர்சனத்தை சந்தித்ததால், இது தொடர்பாக ராபின்சன் மீது நடவடிக்கை எடுத்த இங்கிலாந்து அணி நிர்வாகம், அவரை தற்காலிகமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து, அவரிடம் விசாரணை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முதல் போட்டியில் அசத்திய போதும், பழைய ட்வீட்களால், இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடங்கிக் கிடைக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் (Michael Vaughan), இது பற்றி சில கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'ஓல்லி ராபின்சன் விவகாரத்தை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நியாயமான முறையில், கையாண்டதாக நான் நினைக்கிறேன். பலர் இதனை ஏற்க மாட்டார்கள். ஆனால், மீண்டும் ராபின்சன் ஒரு போதும் விளையாடக் கூடாது என பலர் கூறுவது மிகவும் அபத்தமானது. அவர் இந்தியாவுக்கு எதிராக நிச்சயம் விளையாட வேண்டும். கண்டிப்பாக ஆடுவார்' என வாகன் ட்வீட் செய்துள்ளார்.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்குப் பிறகு, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்