என்னது இந்தியாவுக்கு ‘புது’ கோச் இவரா..? ‘இதுமட்டும் உண்மையா இருந்தா’.. மத்த டீம் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாதான் இருக்கணும்.. கிரிக்கெட் உலகிற்கு ‘அலெர்ட்’ கொடுத்த வாகன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமைப் பயிற்யாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது ரவி சாஸ்திரி (Ravi Shastri) தலைமைப் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைகிறது. அதனால் புதிய பயிற்சியாளரை நியமிப்பது குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் (Rahul Dravid) மற்றும் விவிஎஸ் லட்சுமணன் (VVS Laxman) ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இருவரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு ஒருநாள் தொடரை வென்று கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா கலந்து கொண்டனர். இப்போட்டி முடிவடைந்ததும் இருவரும் ராகுல் டிராவிட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சுழலில், இந்திய அணியிக்கு பயிற்சியாளராக இருக்க ராகுல் டிராவிட் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ‘ராகுல் டிராவிட் அடுத்த தலைமை பயிற்சியாளராவது உறுதியாகியுள்ளது. அவர் விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவார். ராகுல் டிராவிட் வரும் 2023-ம் ஆண்டு வரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். பவுலிங் பயிற்சியாளராக பிராஸ் மாம்ரே நியமிக்கப்பட உள்ளார்’ என தெரிவித்துள்ளார். ஆனாலும் இதுதொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் (Michael Vaughan) இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், ‘ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராவது உண்மை என்றால், உலக கிரிக்கெட் அணிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்’ என மைக்கேல் வாகன் பதிவிட்டுள்ளார்.
If it’s true Rahul Dravid is to be the next Indian coach I think the rest of the world better beware … !
— Michael Vaughan (@MichaelVaughan) October 15, 2021
முன்னதாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்போது அவர் தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்