வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்காம.. இப்ப பாருங்க எப்படி ஆகிருச்சுன்னு.. இங்கிலாந்து பண்ணிய பெரிய ‘தப்பு’.. லெஃப்ட் ரைட் வாங்கிய வாகன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்காக இங்கிலாந்து அணியை மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. முன்பு எப்போது இல்லாத வகையில் இப்போட்டி சற்று பரபரப்பாகவே காணப்பட்டது. அதற்கு காரணம் இரு அணி வீரர்களும் வெற்றி பெற தீவிரமாக முனைப்பு காட்டியதுதான்.
இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர்களை சீண்டிக் கொண்டே இருந்தார். அவ்வப்போது தனது பவுன்சர்களின் மூலம் அச்சுறுத்தலையும் கொடுத்து வந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பவுன்சர் மழை பொழிந்தார். இதற்கு இங்கிலாந்தும் தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் பதிலடி கொடுத்தது.
இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரஹானே மட்டுமே 61 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். இந்த சமயத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமியும், பும்ராவும் களமிறங்கினர்.
இந்திய டாப் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்துவிட்டதால், போட்டி இங்கிலாந்து பக்கம் திரும்பி இருந்தது. அதனால் இங்கிலாந்து வீரர்கள் சற்று அலட்சியமான போக்கை கடைபிடித்தனர். களத்தில் இருந்த பும்ரா மற்றும் முகமது ஷமியிடம் அடிக்கடி வம்பிழுத்தனர். இதில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், பும்ராவை ஏதோ சொல்லி திட்ட, பதிலுக்கு பும்ராவும் திட்ட ஆரம்பித்தார். இதனால் போட்டி பரபரப்பாக காணப்பட்டது.
அதுவரை சாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ஷமி-பும்ரா கூட்டணி, இந்த சம்பவத்துக்கு பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது. இதனால் 89 ரன்களுக்கு அந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதனை இங்கிலாந்து அணி எதிர்பார்க்கவில்லை. இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து 298 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதனால் இங்கிலாந்து வெற்றி 271 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வீரர்களால் இந்திய பந்துவீச்சின் வேகத்தை சமாளிக்க முடியவில்லை. களமிறங்கிய அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இதனால் 120 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், இப்போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘அமைதியாக இருந்த இந்திய அணியை உசுப்பேற்றி வீட்டீர்கள். இதன் காரணமாகதான் அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டார்கள்.
இனி அடுத்த டெஸ்ட் போட்டியில் நீங்கள் கம்பேக் கொடுக்க வேண்டும். ஆனால் அடுத்த 3 போட்டிகளிலும் இந்தியா ஆக்ரோஷமான ஆட்டத்தையே வெளிப்படுத்தும். சும்மா இருந்த இந்தியர்களை நீங்கள் சீண்டியதால், இந்த விளைவை சந்தித்துள்ளீர்கள்’ என இங்கிலாந்து வீரர்களை மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்