'கொரோனா பாதித்த நிமிடங்கள்..' "இக்கட்டான நேரத்துல 'ஷாருக்கான்' கொடுத்த 'தெம்பு'.." 'முதல்' முறையாக மனம் திறந்த 'வருண்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் 14 ஆவது ஐபிஎல் சீசன் நடைபெற்று வந்த நிலையில், சில அணிகளின் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், உடனடியாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு (Varun Chakravarthy) தான் முதலில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அதே அணியிலுள்ள சந்தீப் வாரியர் என்பவருக்கும், அதன் பிறகு, சென்னை, டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது.
மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 2 வாரங்கள் வரை சிகிச்சை பெற்று வந்த வருண் சக்ரவர்த்தி, தற்போது சொந்த ஊரான சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதியான சமயத்தில் தனது அனுபவம் குறித்து, வருண் சக்ரவர்த்தி முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
'கொரோனா தொற்று உறுதியானதும், நமக்குள் நடைபெறும் கடினமான விஷயம் என்னவென்றால், உங்களை மொத்தமாக அது திசை திருப்பி, மற்ற அனைத்து விஷயங்களில் இருந்தும் உங்களை தனியாக உணர வைக்கும். குடும்பம் மற்றும் அணி வீரர்களுடன் இல்லாமல், தனியாக இருப்பதால் அப்படி உங்களை உணர வைக்கும். தற்போது நான் குணமடைந்து வீட்டிற்கு வந்து விட்டேன். இருந்த போதும், பயிற்சிகளை ஒன்றும் நான் தொடங்கவில்லை.
கொரோனா தொடர்பான அறிகுறிகள் இல்லை என்றாலும், எனது உடல் அதிக சோர்வாக உள்ளது. வாசனை மற்றும் ருசிகளை அதிக நேரம் உணர முடிவதில்லை. ஆனால், விரைவில் பயிற்சியை நான் தொடங்குவேன்' என வருண் தெரிவித்தார். தொடர்ந்து, கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட போது, தனது அணி நிர்வாகம் செய்த உதவி குறித்து பேசிய வருண் சக்ரவர்த்தி, 'கொல்கத்தா அணி நிர்வாகம், எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்தது. ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, அனைத்து வீரர்களும் சென்ற பிறகும், என்னைக் கவனித்துக் கொள்வதற்காக ஒருவரை நியமித்திருந்தார்கள்.
அதன் பிறகு, இரண்டு முறை நெகடிவ் என முடிவுகள் வந்த பிறகு தான், என்னை பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். குறிப்பாக, அணியின் உரிமையாளாரான ஷாருக்கான், என்னைப் போன்ற அணியிலுள்ள அனைத்து வீரர்களுக்கும், தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அழைத்துப் பேசினார். அவர் தான் எங்கள் அனைவருக்கும், அதிக நம்பிக்கை கொடுத்தார்' என வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்