டி20 உலகக்கோப்பை நெருங்கிட்டு இருக்கு.. வருண் மறந்துகூட அந்த ‘தப்பை’ பண்ணிரக் கூடாது.. நிபுணர்கள் எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ள வருண் சக்கரவர்த்தியின் காயம் குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் (IPL) 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்ததும், இம்மாதம் 19-ம் தேதி டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் தொடங்க உள்ளது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது. இது இரு நாட்டு ரசிகர்களுக்கும் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை டி20 உலகக்கோப்பை தொடரில் ஒருமுறை பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது கிடையாது. அதனை இந்த ஆண்டு தக்க வைக்க இந்திய அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட உள்ளதால், இந்திய வீரர்களின் உடல்நிலையை பிசிசிஐ (BCCI) தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு (Varun Chakravarthy) காயம் ஏற்பட்டுள்ளது பிசிசிஐக்கு கவலை அளித்துள்ளது. முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக சிகிச்சை மேற்கொண்ட வருண் சக்கரவர்த்தி, அதிலிருந்து குணமடைந்து தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் பந்துவீசும் போது காலில் அடிக்கடி வலி உண்டாகி அவதிப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், ‘வருண் சக்கரவர்த்தின் முழங்கால் தற்போது நல்ல நிலையில் இல்லை. அவர் அடிக்கடி வலியை உணர்கிறார். டி20 உலகக்கோப்பை தொடர் மட்டும் இல்லையென்றால், அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என பிசிசிஐ விருப்பப்படுகிறது. கொல்கத்தா அணியில் விளையாடி வரும் வருண் சக்கரவர்த்திக்கு, அந்த அணி நிர்வாகம் அவருக்காக விரிவான திட்டத்தை தயார் செய்துள்ளது’ என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘வருண் சக்கரவர்த்திக்கு காயம் பெரிய அளவில் இல்லை என்றாலும், அவ்வப்போது ஏற்படும் வலியே இப்போது பிரச்சனையாக உள்ளது. வலி நிவாரணை எடுத்துக்கொண்டால் முழு ஓவரையும் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் வீசுகிறார். அதனால் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி, ஜடேஜா போன்று டைவ் அடித்து பீல்டிங் செய்வது போன்ற செயல்களில் மட்டும் வருண் சக்கரவர்த்தி ஈடுபடாமல் கவனமாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்