கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து திடீரென விலகிய அம்பயர்கள்.. ஐபிஎல் போட்டி தொடர்ந்து நடைபெறுமா..? ரசிகர்கள் கேள்வி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து அம்பயர்கள் இருவர் திடீரென விலகியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், பல்வேறு கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி இல்லை. மேலும் கிரிக்கெட் வீரர்களும் பயோ பபுளில் இருந்து விளையாடி வருகின்றனர்.
இதனிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இதனை அடுத்து ராஜஸ்தான் அணியில் விளையாடிய மற்றொரு இங்கிலாந்து வீரரான லியாம் லிவிங்ஸ்டன், நீண்ட நாட்களாக பயோ பபுளில் இருப்பதால் சிறிது காலம் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என அவரும் நாடு திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை மற்றும் பெங்களூரு அணியில் விளையாடிய ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகிய ஆஸ்திரேலியா வீரர்களும் திடீரென நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்தனர். அதேபோல் டெல்லி அணியில் விளையாடிய தமிழக வீரரான அஸ்வினும் தொடரின் பாதியிலேயே விலகினார்.
இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அம்பயர் நிதின் மேனன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது தாய் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பாதியிலேயே வெளியேறுகிறார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் அம்பயராக இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் ரெய்பலும் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு இந்தியாவில் இருந்து விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தும் முன் நாடு திரும்ப வேண்டும் என்பதற்காக அம்பயர் பால் ரெய்பல் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர்களைத் தொடர்ந்து அம்பயர்களும் பாதியிலேயே விலகியுள்ளதால், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்