'அவசர அவசரமாக நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா'... 'குடும்பத்தினர் மீதான தாக்குதலில் நேர்ந்த சோகம்'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி அவசர அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.
கொரேனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி துபாய்க்கு கிளம்பிச் சென்றனர். அங்கு 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பின் நேற்று பயிற்சியை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதிர்ச்சி தரும் விதமாக சென்னை அணியின் ஊழியர்கள் 12 பேருக்கும், பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா சொந்த காரணங்களுக்காக இந்தியாவுக்குத் திரும்புவதாகவும், அவர் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் விலகுவதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி அவசர அவசரமாக நாடு திரும்பியதற்கு அவருடைய குடும்பத்தில் நேர்ந்த எதிர்பாராத ஒரு துயர சம்பவமே காரணம் என தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பத்தினர் பதான்கோட்டில் உள்ள தரியல் கிராமத்தில் வசித்து வந்த நிலையில், இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில், ரெய்னாவின் மாமா அசோக் குமார் (58) பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், அவருடைய அத்தை ஆஷா தேவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ரெய்னாவின் சகோதரர்களான கெளசல் குமாரும், அபின் குமாரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சுரேஷ் ரெய்னாவுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் சிஎஸ்கே உறுதுணையாக இருக்கும் என அதன் தலைமை நிர்வாகி விஸ்வநாதன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்