தோனி அடிச்ச அதே அடி.. U 19 உலக கோப்பையின் கடைசி பந்து.. 11 வருசத்துக்கு அப்புறம் ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்த 'இளம்' வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுU 19 உலக கோப்பை இறுதி போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி, கோப்பையைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.
அரை இறுதியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி, இங்கிலாந்தை இறுதி போட்டியில் சந்தித்தது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
44.5 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, 189 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக, ராஜ் பாவா 5 விக்கெட்டுகளும், ரவி குமார் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்திய அணி சாம்பியன்
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால், சற்று நிதானமாக ஆடியது. பின்னர், ஷேக் ரஷீத் மற்றும் நிஷாந்த் சிந்து ஆகியோர், அரை சதம் அடித்து, தங்களின் பங்களிப்பை அளிக்கவே, 48 ஆவது ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்திருந்தது.
சாதனை படைத்த இளம் இந்திய அணி
ஐந்தாவது முறையாக U 19 உலக கோப்பையை வென்று அசத்தியுள்ள இந்திய அணி, இதற்கு முன்பு, முகமது கைஃப், விராட் கோலி, உன்முகுந்த் சந்த் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரின் தலைமையில், கோப்பையை சொந்தமாக்கியுள்ளது. அதே போல, அதிக முறை U 19 கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது.
கோப்பையை வென்று சாதித்த வருங்கால இந்திய அணி வீரர்களுக்கு, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல, அனைத்து வீரர்களுக்கும் தலா 40 லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
தினேஷ் பானா
இதில், தோனி போலவே இளம் வீரர் கடைசி பந்தில் செய்த அதிரடி, தற்போது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. U 19 இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தினேஷ் பானா செயல்பட்டிருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில், 4 பந்துகள் சந்தித்த தினேஷ் பானா, 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்திருந்தார்.
கடைசி பந்தில் சிக்ஸர்
அதே போல, இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி போட்டியிலும், 5 பந்துகள் ஆடிய தினேஷ் பானா, 2 சிக்ஸர்களுடன் 13 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, சிக்ஸர் மழை பொழியும் தினேஷ் பானா, இறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என இருந்த போது, சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
தோனியின் சிக்ஸர்
கடந்த 2011 ஆம் ஆண்டு, 50 ஓவர் உலக கோப்பை போட்டியில், 28 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி, கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, இறுதி போட்டியில் சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கை எட்டியிருந்தார். அப்போது, 'Dhoni finishes off in style!' என்ற வார்த்தையை யாராலும் மறந்திருக்க முடியாது.
ஞாபகப்படுத்திய தினேஷ் பானா
கிட்டத்தட்ட அதே போல, தோனி அடித்த அதே பகுதியில், தினேஷ் பானாவும் நேற்றைய போட்டியில், சிக்ஸ் அடித்து அசத்தியுள்ளதால், பலரும் அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 15 பந்துகளில், ஒரு ரன் தேவை என இருந்த போது, சிக்ஸர் அடித்து அசாத்திய தினேஷ் பானாவும், தோனியைப் போல ஒரு விக்கெட் கீப்பர் தான்.
Winning moment 🥳🥳
Congratulations team India 🎉👏#U19CWC #U19CWC2022 #dineshbana pic.twitter.com/bJGaGSNWsi
— Crayys 🍥 (@Crayonicsque_) February 5, 2022
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய உலக கோப்பையை கைப்பற்றிய தருணத்தை நினைவு கூரும் வகையில், தினேஷ் பானா அடித்த சிக்ஸர் தொடர்பான பதிவுகள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்