செம்ம ஃபார்ம்ல இருக்குற ப்ளேயருக்கு... வேணும்னே 'Family Leave' கொடுத்த நியூசிலாந்து அணி!.. இந்திய அணிக்கு எதிராக மெகா ஸ்கெட்ச்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணி வீரர் ட்ரெண்ட் போல்ட்க்கு திடீர் விடுப்பு கொடுக்கப்பட்டதன் பின்னணியில் பல்வேறு வியூகங்கள் வெளிவந்துள்ளன.

செம்ம ஃபார்ம்ல இருக்குற ப்ளேயருக்கு... வேணும்னே 'Family Leave' கொடுத்த நியூசிலாந்து அணி!.. இந்திய அணிக்கு எதிராக மெகா ஸ்கெட்ச்!

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நாளை (ஜூன் 2) இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு கிளம்பிச் செல்கிறது. ஜூன் 18ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் இந்தியா விளையாடுகிறது.

பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடுகிறது. ஆக மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகள். ஜூன் முதல் செப்டம்பர் வரை ரசிகர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் திருவிழா காத்திருக்கிறது எனலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல். டெஸ்ட் அந்தஸ்து உள்ள அணிகள் இத்தனை மாதங்களாக விளையாடி புள்ளிகளை சேர்த்து, அதில் டாப் இரண்டு அணிகளாக இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளன. எனினும், இப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால், நியூஸிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்கின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள். 

அதற்கு மிக முக்கிய காரணம், இந்தியாவுடன் விளையாடுவதற்கு முன்பே, இங்கிலாந்தில் அந்நாட்டுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து விளையாடுகிறது. இத்தொடர் முடிந்த அடுத்த நான்கே நாட்களில், இந்தியாவுடன் WTC இறுதிப் போட்டியில் மோதுகிறது. எனவே, நியூசிலாந்து சிறப்பான ஃபார்மோடு இந்தியாவை எதிர்கொள்ளும்.

அதேசமயம், ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இத்தனை நாட்கள் வீட்டிலும், கடந்த 14 நாட்களாக மும்பை ஹோட்டலிலும் தனிமைப்படுத்திக் கொண்டு, இப்போது இங்கிலாந்திலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படும் இந்திய வீரர்கள், நேராக இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. ஆகையால், நியூஸிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு Family Leave கொடுக்கப்பட்டு ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், புத்துணர்ச்சியுடன் அவர் களமிறங்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதுகுறித்து நியூசிலாந்து கோச் கேரி ஸ்டெட் கூறுகையில், "இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் டிரெண்ட் போல்ட்டை நீங்கள் பார்க்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர் வெள்ளிக்கிழமை தான் இங்கிலாந்துக்கே வருகிறார். அவர் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனினும், அவர் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பிருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

நியூசிலாந்து மிகத் தெளிவாக, டிரெண்ட் போல்ட்டை பாதுகாப்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் முக்கிய நியூசிலாந்து பவுலராக இருப்பவர் டிரெண்ட் போல்ட். இவரது Pace-ஐ சமாளிப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இவரது ஸ்விங் + பேஸ் அவ்வளவு எளிதில் கெஸ் செய்ய முடியாது.

இங்கிலாந்து பிட்ச்சுகள், ஏறக்குறைய நியூசிலாந்து பிட்ச்சுகளை போன்று இருக்கும் என்பதால், பாரபட்சமின்றி விக்கெட்டுகள் சரியும். இங்கிலாந்தில், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 21 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார். அவருடைய பெஸ்ட் 5/57.  குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக தனது ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார் டிரெண்ட் போல்ட். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக ஐபிஎல் 2020 தொடர் இருந்தது.

அமீரகத்தில் நடைபெற்ற அத்தொடரில் பவர் பிளேயில் டிரெண்ட் போல்ட் 36 ஓவர்களை வீசி 16 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டும் டி20 போட்டிகளிலேயே, அவர்களை திணறடித்தவர். இதுவரை நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசனிலும் மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தினார்.

 

மற்ற செய்திகள்