டிஎன்பிஎல் தொடரில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’?... ‘வீரர்களை வாட்ஸ்அப்பில் அணுகிய புரோக்கர்கள்’... பிசிசிஐ அதிரடி விசாரணை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி.என்.பி.எல். எனப்படும், தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில், சூதாட்டம் நடைப்பெற்று இருப்பதாக வந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் பாணியில், தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரை கடந்த 2016-ம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, துவக்கி வைத்தார். ஸ்டார் இந்தியாவில் ஒளிபரப்பப்படும் இத் தொடரை, முக்கிய கிரிக்கெட் வீரர்களான மேத்யூ ஹைடன், பிரட் லீ போன்றோர் வர்ணனை செய்து வருகின்றனர். சென்னையின் சேப்பாக் கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு, இத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 8 அணிகள் கொண்ட டி.என்.பி.எல். போட்டியானது, கடந்த ஜூலை 19-ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நடைப்பெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்ற இப்போட்டியில், இந்திய முன்னணி வீரர்களான, அஸ்வின், தினேஷ் கார்த்திக்,விஜய் சங்கர், முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், சூதாட்டத்திற்கு இணங்கும் வகையில், தங்களின் செல்போன் எண்களுக்கு அடையாளம் தெரியாத மர்மநபர்கள், வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாக, சில வீரர்கள் பிசிசிஐயிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை துவங்கியுள்ளதாக, பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி அஜீத் சிங் கூறுகையில், ‘சில வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட மர்ம நபர்கள், வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டதாக புகார் அளித்தனர். அவர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்வுள்ளது. அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும். மர்ம நபரிடம் வந்த வாட்ஸ் அப் மெசேஜுக்கு சர்வதேச வீரர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விசாரணைக்கு பின் முழுவிவரங்கள் வெளியிடப்படும்’ என்றார். மேலும், டி.என்.பி.எல். சூதாட்டத் தரகர்கள் சட்டவிரோத ஒப்பந்தம் செய்து கொண்டு, விளையாட்டைக் கட்டுப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.