ஸ்பெயினில் நடக்கும் அர்னால்டு இரும்பு மனிதன் கிளாசிக் போட்டி! வெறித்தனமான வொர்க் அவுட்டில் தமிழ்நாடு இரும்பு மனிதன் கண்ணன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள தாமரைக்குட்டி விளை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு தற்போது 40 வயது ஆகிறது. உடற்கல்வி பயிற்சியாளராக இருக்கும் இவர் ஏற்கனவே இந்தியாவின் இரும்பு மனிதர் என்னும் பட்டத்தை பெற்றவர் ஆவார்.
நாகர்கோவிலில் சுமார் 9.5 டன் எடை கொண்ட லாரியை கயிற்றால் இழுத்தது உள்ளிட்ட பல்வேறு சாகசங்களையும் செய்து மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக இருக்கும் கண்ணன், பிறகு உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அதே போல, உலக இரும்பு மனிதன் போட்டி முதல் முறையாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். ஆண்களுக்கு நிகராக நிறைய பெண்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சாகசம் புரிந்திருந்தனர்.
மேலும் இதன் 85 கிலோ எடை பிரிவு போட்டியில் நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் கலந்து கொண்டிருந்தார். இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், இந்த போட்டியில் லாக் பிரஸ், யோக் வாக், டயர் ஃப்ளிப் மற்றும் ஸ்டோன் என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் முதல் இடத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் என்ற வீரர் பிடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை கண்ணன் பிடித்து வெள்ளி பதக்கமும் வென்றிருந்தார். ஏற்கனவே இரும்பு மனிதன் என புகழ் பெற்று வந்த நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன், பிறகு உலக இரும்பு மனிதன் போட்டிகளிலும் பதக்கம் வென்றது பல தரப்பிலான மக்களின் பாராட்டுகளையும் அவருக்கு பெற்று கொடுத்தது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி ஸ்பெயினில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. அதில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளவுள்ளார் கண்ணன். இதற்கென அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மற்ற செய்திகள்