கண்டுபிடிச்சிட்டோம்..! அந்த ‘மெயில்’ இந்தியாவுல இருந்துதான் வந்திருக்கு.. இதுக்கு பின்னாடி உலக நாடுகளோட ‘சதி’ இருக்கு.. பரபரப்பை கிளப்பிய பாகிஸ்தான் அமைச்சர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணிக்கு இந்தியாவில் இருந்து மிரட்டல் இமெயில் அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. இதற்காக டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருந்தது. இப்போட்டி ஆரம்பிக்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு, திடீரென நியூசிலாந்து அணி விளையாட மாட்டோம் என தெரிவித்து. அதில் நியூசிலாந்து வீரர்கள் சிலருக்கு இமெயில் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் வீரர்களின் பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான அனைத்து தொடர்களையும் ரத்து செய்வதாக நியூசிலாந்து அணி அறிவித்தது.
இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, மற்றும் கேப்டன் பாபர் அசாம், நியூசிலாந்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அடுத்த அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்திரி (Fawad Chaudhry) பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். அதில், ‘நியூசிலாந்து வீரர்களுக்கு அனுப்பப்பட்ட இமெயில் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. அது ProtonMail தளத்திலிருந்து VPN-ஐ பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது. போலி ஐடியின் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ளது. இதற்கு பின்னால் உலக நாடுகளின் சதி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது’ என இந்தியா மீது ஃபவாத் சவுத்திரி குற்றம் சுமத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்