பறிபோகிறதா தோனியின் 'ஆலோசகர்' பதவி?.. பிசிசிஐ-க்கு பறந்த அவசர புகார்!.. 'ஏன்யா இப்படி பண்றீங்க'!?.. நொறுங்கிப் போன ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. 15 வீரர்களும் 3 ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்பட்டனர். இந்த முறை டி20 உலகக்கோப்பை அணி 50 சதவீதம் அனுபவ வீரர்கள், 50 சதவீதம் இளம் வீரர்களும் என கலப்பு அணியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் உலகக்கோப்பை தொடரின் போது ஆலோசகராக செயல்பட முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி செயல்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனியை இனி இந்திய ஜெர்ஸியில் பார்க்க முடியாதா, சர்வதேச போட்டிகளில் பார்க்க முடியாதா என ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்து வந்தனர். தற்போது எம்.எஸ். தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் தோனி குறித்த பேச்சு தான் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் இந்த கொண்டாட்டம் ஓய்வதற்குள் தோனியின் புதிய பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா பிசிசிஐ-க்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவதை நிறுத்த வேண்டும். அந்த முடிவை கைவிட வேண்டும். ஏனெனில், தோனி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆதலால், உத்தரவை ரத்து செய்யுங்கள்" எனக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-ன் விதிமுறைகளில் 38 (4)-ன் படி, ஒருவர் ஒரே நேரத்தில் 2 பதவிகளை வகிக்கக்கூடாது. தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும், இந்திய அணி ஆலோசகராகவும் செயல்பட முடியாது. எனவே, பிசிசிஐ-ன் அபெக்ஸ் கவுன்சில் இதனை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என சஞ்சீவ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை பிசிசிஐ-ன் செயல் தலைவர் ஜெய் ஷா தான் ஆலோசகராக அறிவித்தார். தோனியின் தலைமையில் இந்தியா இதுவரை 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. தோனி பொறுப்பேற்ற முதல் ஐசிசி தொடரே 2007 டி20 உலகக்கோப்பை தான். அதில் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தார். எனவே, அவரின் ஆலோசனைகள் இந்திய அணிக்கு நிச்சயம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான், அவரது நியமனத்துக்கு எதிராக பிசிசிஐ-க்கு சென்ற புகார் குறித்து ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்