‘நடராஜன் இதைப் பண்ணினால்’... ‘கேப்டன் கங்குலிக்கு அவர் எப்படியோ’... ‘அதுமாதிரி கோலிக்கு இவர் இருப்பார்’... ‘பாராட்டி, அறிவுரை வழங்கிய முன்னாள் பவுலர்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக வீரர் நடராஜனுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் கர்சன் கவ்ரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டியின்மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்றார் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை பந்துவீச்சாளர் நடராஜன். இந்தப் போட்டியில் 10 ஓவர்களில் 70 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், தற்போது இன்று துவங்கவுள்ள டி20 தொடரில் ஆடும் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் இடது கை பந்து வீச்சாளருக்கான நீண்டகால தேடுதலுக்கு நடராஜன் சிறப்பான கண்டுபிடிப்பு என, இந்திய அணியின் முன்னாள் இடது கை பந்து வீச்சாளர் கர்சன் கவ்ரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘இந்திய அணிக்கு கிடைத்த பிரகாசமான பந்துவீச்சாளர். மிகவும் திறமையானவர். நன்றாக பந்துவீசி, உடல்தகுதியையும் நன்றாக வைத்துகொண்டால், இந்திய அணியில் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியும்.
நிறைய ரன்களை விட்டுகொடுத்தாலும், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். குறிப்பாக டெத் ஓவரில் மிக அருமையாக யார்க்கர் வீசும் திறனுடன் இருந்து வருகிறார். இதனால் ரன்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. இடது கை வேகப்பந்து வீச்சாளருக்குத் தேவையான அனைத்து குணங்களும் அவரிடம் உள்ளன. விராட் கோலி நல்ல கேப்டன். அதனால், நடராஜனை அவர் ஊக்குவித்து, கற்றுக்கொள்ள உதவுவார். முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் கேப்டன்ஷிப்பில், ஜாகீர் கான் சிறப்பாக செயல்பட்டது போல், விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் நடராஜன் சிறப்பாக செயல்படுவார்.
நடராஜன் அணியில் முன்னேறும்போது, சீரான செயல்திறனுடன் விளையாடினால், நிச்சயம் அவர், இந்திய அணியில் நீண்டகாலம் இடம்பெறுவார். நடராஜன் தனது உடற்தகுதியை மிகவும் தரமாக வைத்திருக்க அறிவுறுத்துகிறேன். அவர் அவ்வாறு நிர்வகித்தால், அவர் இந்திய அணிக்கு நீண்ட காலம் பணியாற்ற முடியும். மேலும் இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்தை நிரப்ப முடியும். ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்வது மட்டும் போதாது. கிரிக்கெட் தொடர்பான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.
அவர் வேகப்பந்து வீச்சாளராக இருந்தால், அவர் குறைந்தது ஒன்றரை மணி நேரம் வலைகளில் பந்து வீச வேண்டும். அவர் எவ்வளவு வலைகளில் பந்து வீசுவாரோ, அவ்வளவு மேம்படுவார். அவர் ஒரு நாளில் குறைந்தது 15 முதல் 20 ஓவர்கள் வரை பந்து வீச வேண்டும். உங்களை நீங்களே தயார் செய்யும் முறை இதுதான். நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள். உள்நாட்டு கிரிக்கெட்டுக்காக அல்ல’ என்று கூறினார்..
மற்ற செய்திகள்