"அவரு குடுத்த 'அட்வைஸ்' தான்... என்ன இங்க வர கொண்டு வந்துருக்கு..." 'ரகசியம்' உடைத்த 'சூர்யகுமார்'... பின்னாலுள்ள சீனியர் 'வீரர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த டி 20 தொடருக்காக, ஐபிஎல் தொடரில் ஜொலித்த சில இந்திய வீரர்கள், அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதில் குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியில் இடம்பிடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம், கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் மற்றும் முதல் தர போட்டில்களில் சூர்யகுமார் சிறப்பாக ஆடி வந்த போதும், அவர் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை. ஒவ்வொரு தொடருக்காக இந்திய அணி அறிவிக்கப்படும் போதும், தனது பெயர் இடம்பெறும் என காத்திருந்த சூர்யகுமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
ஆனால், இறுதியில், பல நாள் போராட்டத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சூர்யகுமார் யாதவ், தனது பேட்டிங்கில் அதிகம் மேம்பட யார் காரணம் என்பதை தற்போது தெரிவித்துள்ளார்.
'கடந்த 2019 ஆம் ஆண்டு எனது அருகில் உட்கார்ந்த ஜெயவர்த்தனே, நான் பவர்பிளே ஓவர்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்றும், பவர்பிளே ஓவர்கள் முடிந்த பிறகு எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதையும் எனக்கு அறிவுறுத்தினார்.
பவர்பிளே முடிந்த பிறகு, அதிகளவில் இரட்டை மற்றும் ஒற்றை ரன்களை ஓடி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்போது தான் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாகும் என்று அறிவுரை வழங்கினார். என்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், ஸ்மார்ட் வீரராக உருவாக்கி வேண்டும் என ஜெயவர்த்தனே விரும்பினார். நான் பேட்டிங்கில் மேம்பட அவர் மிக முக்கிய காரணம்' என்றார்.
மேலும் பேசிய சூர்யகுமார், 'நான் முதலில் ஆட வந்த போது, ஆஃப் சைட் அதிகம் ஆடுவதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதன் பிறகு, மைதானத்தின் அனைத்து பகுதிகளையும் கவர் செய்து ஆடினேன். பிறகு என் மீதான விமர்சனமே இல்லாமல் போனது. நான் தொடர்ந்து எனது பேட்டிங் திறனை மேம்படுத்திக் கொண்டே தான் இருக்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்