சுரேஷ் ரெய்னா குடும்பத்தில் பெரும் இழப்பு.. இறுதி மூச்சுவரை போராடினீர்கள்.. சின்ன தல உருக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதந்தையின் பிரிவை தாங்க முடியாத முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா "தனது வலிமையின் தூணை இழந்துவிட்டதாக" உருக்கமாக சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2018 வரை சுமார் 13 ஆண்டுகாலம் விளையாடி உள்ளார். இந்திய அணிக்காக இதுவரை அவர் 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் பங்கேற்று சர்வதேச கிரிக்கெட்டில் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் போட்டிகளில் பீல்டிங்கிலும் அசத்தி, மிகச்சிறந்த வீரராக திகழ்ந்தவர் ரெய்னா.
சின்ன தல
அதேபோன்று ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துணை கேப்டனாக செயல்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் மத்தியில் சின்ன தல என்றும் அழைக்கப்படுகிறார். 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5528 ரன்களை குவித்துள்ளார். தோனி சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்த அதே நாளில் தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடிய அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தந்தை மரணம்
இந்நிலையில் நேற்று சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக் சந்த் ரெய்னா உடல்நலக் குறைவால் காலமானார். தந்தையின் இழப்பு அவரது குடும்பத்தில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். சுரேஷ் ரெய்னாவின் தந்தை முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அவரது மறைவிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.
சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் உருக்கம்
அதனோடு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் சுரேஷ் ரெய்னாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், சுரேஷ் ரெய்னா தனது தந்தை குறித்து சமூகவலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், "தந்தையை இழந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரது மறைவால் எனது வலிமையின் தூணை இழந்துவிட்டேன். தனது கடைசி மூச்சு வரை உண்மையான போராளியாக இருந்தார். உங்களது ஆன்மா சாந்தியடையட்டும் அப்பா. உங்களை எப்போதும் மிஸ் பன்றேன்" என்று தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதனை போஸ்ட் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்