"தோனி அங்க இருந்தாலே.." மேட்ச் முடிஞ்சதும் ரெய்னா போட்ட ட்வீட்.. இவரு எங்க போனாலும் CSK'ian தான் போல..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணிக்கு எதிராக நடந்து முடிந்த லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல், முதல் ஓவரிலேயே அவுட்டாகினர்.
இதன் பின்னர் வந்த வீரர்கள், நிதானமாக ரன் சேர்க்க, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, திலக் வர்மா 51 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார்.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியிலும், சில விக்கெட்டுகள் சிறிய இடைவெளியில் விழுந்தது. இருந்தாலும், கடைசி கட்டத்தில் தோனி மற்றும் ப்ரெட்டோரியஸ் ஆகியோர் ரன் சேர்த்தனர். இதற்கு முன்பாக உத்தப்பா மற்றும் ராயுடு ஆகியோரும் அதிக ரன் சேர்த்திருந்தனர்.
கூலா ஆடுன தோனி..
இறுதியில், சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி நான்கு பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனி இருக்க, நெருக்கடியான சூழல், சிஎஸ்கே அணிக்கு உருவாகி இருந்தது. ஆனால், எதை பற்றியும் கவலைப்படாத தோனி, 6, 4, 2, 4 என அடிக்க கடைசி பந்தில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம், இரண்டாவது வெற்றியை நடப்பு தொடரில் பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், புள்ளிப் பட்டியலில் அதே 9 ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த சில சீசன்களில் ஃபார்மில் இல்லாத தோனி, நடப்பு சீசனின் முதல் போட்டியில் 50 ரன்கள் அடித்திருந்தார். தொடர்ந்து, தற்போது 'Vintage' பினிஷர் தோனியை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். அவரது ஆட்டத்தினை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தோனியின் இன்னிங்ஸை முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டி உள்ளார்.
பாராட்டிய ரெய்னா..
கடந்த சீசனில், சென்னை அணிக்காக ஆடி வந்த ரெய்னாவை, இந்த சீசனில் சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை. தொடர்ந்து, தற்போதைய ஐபிஎல் தொடரில், வர்ணனை செய்தும் வருகிறார் ரெய்னா.
ஐபிஎல் தொடர் குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து வரும் சுரேஷ் ரெய்னா, தற்போது சென்னை அணியின் வெற்றி பற்றியும் ட்வீட் செய்துள்ளார். அதில், "இந்த சீசனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி. தோனி பாயின் மிக மிக தேவையான இன்னிங்ஸ் இது. அவர் முடித்து வைப்பதை பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளது. மற்றொரு மகத்தான வெற்றிக்கு ஒட்டுமொத்த சிஎஸ்கே அணிக்கும் வாழ்த்துக்கள்" என ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பதிவுகள், தற்போது சிஎஸ்கே மற்றும் ரெய்னா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/
மற்ற செய்திகள்