ரஜினியோட அறிக்கையை கவனிச்சீங்களா.. வெங்கடேஷ் ஐயர் செம்ம ஹேப்பி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇரண்டு நாட்களுக்கு முன்னர் டிசம்பர் 12-ம் தேதியன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ரஜினிக்கு, ஆன்லைனிலும் நேரிலும் சென்று வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதையடுத்து, தனது நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்து ரஜினி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி பலர் ரஜினிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துச் செய்தியை கூறியிருந்தாலும், இளம் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஒரு படி மேலே தான்.
தற்போது பிசிசிஐ தரப்பு, விஜய் ஹசாரே தொடரை நடத்தி வருகிறது. அதில் மத்திய பிரதேசம் சண்டிகர் அணிகளுக்கு இடையில் நேற்று முன் தினம் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஃபுல் ஃபார்மில் இருந்தார். அவர், சண்டிகர் அணியின் பவுலர்களின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறித்து சதம் விளாசி அசத்தினார்.
மொத்தமாக 113 பந்துகள் விளையாடி வெங்கடேஷ், 151 ரன்கள் குவித்து அதிரடி காண்பித்தார். இதன் மூலம் மத்திய பிரதேச அணி, 50 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் வெங்கடேஷின் ஸ்டிரைக் ரேட், 133.63 ஆகும். தனது இன்னிங்ஸில் மொத்தமாக 8 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் விளாசி அசத்தினார் வெங்கடேஷ்.
அவர் இப்படி சதம் விளாசி அதிரடி காண்பித்ததை விட, அனைவரையும் கவனிக்க வைத்தது வேறொரு விஷயம். சதம் அடித்தப் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் அதை கொண்டாடினார் வெங்கடேஷ்.
ரஜினியின் ரசிகரான வெங்கடேஷ், தனது சதத்தை அவருக்கு உரித்தாக்கி உள்ளார். இது சம்பந்தமான வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அதே வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தது. இதைத் தொடர்ந்து பலரும் இந்த வீடியோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.
இதையடுத்து தான் தனது நன்றி தெரிவிக்கும் அறிக்கையில் வெங்கடேஷ் ஐயரையும் சேர்த்துள்ளார் ரஜினி. மேலும் அவர் நன்றி தெரிவித்துள்ள விளையாட்டு வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் ஆகியோரையும் இணைத்துள்ளார்.
மற்ற செய்திகள்