அடுத்த கேப்டனா ‘இவரை’ செலக்ட் பண்ணுங்க.. இது யாருமே எதிர்பார்க்காத பெயர்.. இளம் வீரரை கை காட்டிய கவாஸ்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமிப்பது குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய பின் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட்டுக்கும் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார். இவர் தலைமையிலான இந்திய அணி பல வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் ஐசிசி நடத்தும் கோப்பையை மட்டும் கோலி பெற்று தரவில்லை. இதுதான் அவர் மீது நீண்ட நாள்களாக விமர்சனமாக வைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு லிமிடெட் ஓவர் இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகப் போவதாக தகவல்கள் பரவின. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ஒரு அறிக்கையை விராட் கோலி வெளியிட்டார். அதில், வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.
அதனால் டி20 அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதில், ‘இந்திய அணி புதிய கேப்டனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் கே.எல்.ராகுல் அதற்கு சரியாக இருப்பார். சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக விளையாடினார். அதேபோல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். முதலில் துணைக் கேப்டனாக நியமித்து, பின்னர் படிப்படியாக கேப்டனாக நியமிக்கலாம்’ என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்து வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 3-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து வருகிறது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோஹித் ஷர்மா கேப்டனாக வழி நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது
மற்ற செய்திகள்