"அட போங்கைய்யா, நீங்களும் உங்க பிளானும்.." கடுகடுத்த சுனில் கவாஸ்கர்! எதுக்கு இப்படி கோவப்படுறாரு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

"அட போங்கைய்யா, நீங்களும் உங்க பிளானும்.." கடுகடுத்த சுனில் கவாஸ்கர்! எதுக்கு இப்படி கோவப்படுறாரு?

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 296 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் பாவுமா மற்றும் வெண்டர் டுசன் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியிருந்தனர்.

ஆரம்பத்தில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்த இந்திய அணி, பாவுமா - வெண்டர் ஜோடியை பிரிக்க திணறியது.

நாளை நடைபெறும் போட்டி

தொடர்ந்து ஆடிய இந்திய அணியில், ஷிகர் தவான் மற்றும் கோலி ஆகியோர், சிறப்பாக ஆடி ரன் சேர்த்த போதும், மிடில் ஆர்டர் சொதப்பியதால், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில், ஷர்துல் தாக்கூர் தனியாக போராடி, 50 ரன்கள் எடுத்தும், இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி, நாளை நடைபெறவுள்ளது.

இந்திய அணியின் தவறு

இந்நிலையில், இந்திய அணி செய்த சில முக்கியமான தவறுகள் தான் போட்டி தோல்வி அடைய காரணமாக அமைந்தது என பலர் கூறி வருகின்றனர். கேப்டன் கே எல் ராகுல் எடுத்த முடிவுகள், இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை, ஆடும் லெவனிலுள்ள குழப்பங்கள் என பல காரணங்களை சுட்டிக் காட்டி வருகின்றனர்.

ராகுல் தான் பதில் சொல்லணும்

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்திய அணி மீது சில கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். 'வெங்கடேஷ் ஐயர் ஏன் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை என்பதற்கு, கேப்டன் ராகுல் தான் பதில் சொல்ல வேண்டும். மிகவும் புதிய வீரரான வெங்கடேஷ் ஐயர், கடந்த 4 - 5 மாதங்களில் தான், தனக்கான பெயரை சம்பாதித்து, அதன் மூலம் தற்போது இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

மாற்றம்

இதனால், அவரது ஆட்டத் திறன் பற்றி எதிரணி வீரர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது. அப்படி இருக்கும் போது, அவர் இரண்டு ஓவர் வரை பந்து வீசினால் தான், எதிரணியினருக்கு அவரது பந்து வீச்சின் நுணுக்கம் பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஒரு வேளை, அவரது பந்து வீச்சால், பேட்ஸ்மேன்கள், சில நேரம் குழம்பிக் கூட போயிருப்பார்கள். இல்லையென்றால், நிச்சயம் ஏதாவது ஒரு மாற்றம் நடந்திருக்கும்.

புரிந்து கொள்ள முடியவில்லை

ஆனால், அந்த முடிவை ராகுல் எடுக்கவில்லை. என்னால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை. எதிரணியில், ஒரு பார்ட்னர்ஷிப் நிலைத்து நிற்கும் போது, அவர்கள் எதிர்கொள்ளாத ஒருவரை பந்து வீசச் செய்திருந்தால், அது சிறந்த முடிவாக இருந்திருக்கும். வெங்கடேஷ் ஐயர் பந்து வீசாமல் போனதற்கு காரணம், சுழற்பந்து வீச்சாளராகள் சிறப்பாக செயல்பட்டது தான் என ஷிகர் தவான் கூறினார்.

அஸ்வின் மற்றும்  சாஹல் ஆகியோர் இணைந்து, 20 ஓவர்கள் வீசி, 106 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தனர். இது தான் சிறந்த பந்து வீச்சா?. வெங்கடேஷ் ஐயர் ஏன் பந்து வீசவில்லை என்பது பற்றி, அணியினரிடம் இருந்து சரியான விளக்கம் வரவில்லை.

அப்படி என்ன திட்டம்?

வெங்கடேஷிற்கு ஒரு ஓவர் கூட தராமல், அணியில் அப்படி என்ன திட்டத்தையும், நிலைப்பாட்டையும் அணியின் கேப்டன் வைத்திருந்தார்?" என சுனில் கவாஸ்கர், ராகுல் மற்றும் இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

KLRAHUL, SUNIL GAVASKAR, IND VS SA, VENKATESH IYER, சுனில் கவாஸ்கர், வெங்கடேஷ் ஐயர், கே எல் ராகுல்

மற்ற செய்திகள்