‘அஸ்வின் தப்பு கணக்கு போட்டுட்டாரு’!.. அந்த நேரத்துல இதை பண்ணிருக்க கூடாது.. தவறை சுட்டிக் காட்டிய கவாஸ்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் செய்த தவறை சுனில் கவாஸ்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஐபிஎல் (IPL) தொடரின் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்று நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இந்த ஜோடியை நீண்ட நேரமாக டெல்லி அணியால் பிரிக்க முடியவில்லை. இதில் ரபாடா வீசிய 13-வது ஓவரில் ஸ்டீவன் ஸ்மித்திடன் கேட்ச் கொடுத்து வெங்கடேஷ் ஐயர் (55 ரன்கள்) அவுட்டானார்.
இதனை அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 13 ரன்களில் வெளியேற, அடுத்து ஆவேஷ் கான் ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து சுப்மன் கில்லும் (46 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக், கேப்டன் இயான் மோர்கன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் வெளியேறினர். அதுவரை கொல்கத்தாவின் பக்கம் இருந்த ஆட்டம் டெல்லியின் பக்கம் திரும்பியது.
இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு கொல்கத்தா அணி சென்றது. அப்போது கடைசி ஓவரை டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (Ashwin) வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் 1 ரன் மட்டும் செல்ல, அடுத்த பந்தில் ரன் ஏதும் செல்லவில்லை. இதனை அடுத்து 3-வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் எல்பிடபுள்யூ ஆகி அவுட்டானார்.
இதனை அடுத்து களமிறங்கிய சுனில் நரேன், எதிர்கொண்ட முதல் பந்திலேயே அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு கொல்கத்தா அணி சென்றது. அப்போது 5-வது பந்தை எதிர்கொண்ட ராகுல் திரிபாதி (Rahul Tripathi), அதை சிக்சருக்கு விளாசினார். இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் கடைசி ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் செய்த தவறை, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar) சுட்டிக்காட்டியுள்ளார். அதில், ‘அஸ்வின் மிகவும் புத்திசாலியான பவுலர். எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்து வீச வேண்டும் அவருக்கு துல்லியமாக தெரியும். பேட்ஸ்மேனின் மனநிலையை அவர் கணித்துவிடுவார். சுனில் நரேன் நிச்சயமாக அடித்து ஆட நினைப்பார் என்று அஸ்வினுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் பந்தை சற்று வொய்டாக வீசினார். அது கடைசியில் ஃபீல்டரின் கையில் கேட்சானது.
ஆனால் அந்த 5-வது பந்தில்தான் அஸ்வின் ஒரு தவறு செய்துவிட்டார். ராகுல் திரிபாதி அடித்துவிட்டு ரன்தான் ஓடுவார் என அஸ்வின் நினைத்துவிட்டார். அதனால்தான் பந்தை நேராக ஃப்ளாட்டாக வீசி விட்டார். இதை சரியாக கணித்த ராகுல் திரிபாதி சிக்சருக்கு விளாசினார்’ என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் டெல்லி அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
மற்ற செய்திகள்