இந்த நேரத்துல இப்படியொரு கமெண்ட் தேவைதானா.. வாயைக் கொடுத்து வம்பில் சிக்கிய கவாஸ்கர்.. கடுப்பான நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே குறித்து சுனில் கவாஸ்கர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சில தினங்களுக்கு முன்பு காலமானார். உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மகத்தான சுழற்பந்து வீச்சாளராக அவர் கருதப்படுகிறார். ஷேன் வார்னேவின் மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரிக்கி பாண்டிங், விராட் கோலி உள்ளிட்ட உலக கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ரசிகர்கள் பலரும் ஷேன் வார்னேவின் பவுலிங் குறித்து சமூக வலைதளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முத்தையா முரளிதரனை விட ஷேன் வார்னே சுமாரான சுழற்பந்து வீச்சாளர்தான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில், ‘இல்லை, அவர் (ஷேன் வார்னே) ஒரு மகத்தான சுழல்பந்து வீச்சாளர் கிடையாது. என்னை பொருத்தவரை ஷேன் வார்னேவை விட இலங்கையின் முத்தையா முரளிதரன் தான் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.
இந்தியாவுக்கு எதிராக ஷேன் வார்னேவின் சாதனை விபரங்களை புரட்டிப் பாருங்கள். அது மிகவும் சுமாராகவே உள்ளது. இந்திய மண்ணில் ஒரே ஒரு முறை மட்டுமே 5 விக்கெட் எடுத்துள்ளார். அதுவும் நாக்பூர் நகரில் நடந்த அந்த போட்டியில் ஜாஹீர் கான் அடித்த மோசமான ஷாட் கேட்ச்சாகி 5-வது விக்கெட்டாக மாறியது. சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை.
அதனால் அவரை ஒரு மிகச்சிறந்த பவுலர் என நான் கூற மாட்டேன். மறுபுறம் முத்தையா முரளிதரன் இந்தியாவுக்கு எதிராக ஏராளமான வெற்றிகளை பெற்று உள்ளார். எனது புத்தகத்தில் ஷேன் வார்னேவை விட முத்தையா முரளிதரனை சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என குறிப்பிடுவேன’ என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் இப்படியொரு கருத்து தேவையில்லாதது என கிரிக்கெட் ரசிகர்கள் சுனில் கவாஸ்கரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்