"கொஞ்சம் பொறுங்க பா.. இப்பவே அவர பாராட்டாதீங்க.." இந்திய வீரர் பற்றி சூசகமாக சொன்ன சுனில் கவாஸ்கர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஆடி வருகிறது.
டி 20 மற்றும் டெஸ்ட் தொடர்கள், இரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள நிலையில், முதலாவதாக டி 20 தொடர் நேற்று ஆரம்பமானது.
இதன் முதல் போட்டியில், பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 199 ரன்கள் குவித்திருந்தது.
அமர்க்களமான ஆரம்பம்
இஷான் கிஷான் அதிரடியாக ஆடி, 89 ரன்கள் அடித்தார். அவருடன் இணைந்து, ஷ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்திருந்தார். தொடர்ந்து சற்று கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இதனால், இந்திய அணி 62 ரன்களில் வெற்றி பெற்று, டி 20 தொடரை அமர்க்களமாக ஆரம்பித்துள்ளது.
'அதிரடி' இஷான் கிஷான்
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி 20 போட்டி, நாளை (பிப்ரவரி 26) நடைபெறவுள்ளது. இந்த போட்டியையும் வென்று, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி நிச்சயம் தயாராகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில், பெரிய அளவில் ரன் குவிக்க திணறிய இஷான் கிஷான், நேற்றைய போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார்.
சுனில் கவாஸ்கர் கருத்து
விக்கெட் கீப்பராக பல்வேறு சாதனைகளையும் அவர் படைத்துள்ள நிலையில், மீண்டும் ஃபார்முக்கு வந்த இஷான் கிஷானை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இஷான் கிஷான் குறித்து சில முக்கியமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதிகம் தடுமாற்றம்
'இஷான் கிஷான் பேட்டிங் சிறப்பான அறிகுறியாகவே உள்ளது. ஆனால், இது முதல் போட்டி மட்டும் தான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகளில், அவர் அந்த அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. அதிகம் தடுமாறவே செய்தார். பந்தின் லெங்த், வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை, அந்த போட்டிகளை விட, இங்கு சற்று வேறுபட்டு எளிதாகவே உள்ளது. இதனால், அவரால் இங்கு எளிதாக ஆடி, ரன் குவிக்க முடிகிறது.
கொஞ்சம் 'Wait' பண்ணலாம்
அவரின் ஒட்டு மொத்த பேட்டிங்கையும் நான் குறை கூறவில்லை. சில டிரைவ் மற்றும் புல் ஷாட்கள் சிறப்பாகவே இருந்தது. என்ற போதும், இது முதல் போட்டி தான். அடுத்த இரண்டு ஆட்டங்களில் காத்திருந்து அவரின் நிலையான ஆட்டம் வெளிப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். நிலையான ஆட்டம் அவரிடம் இருந்து வெளிப்பட்டு விட்டால், நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீரர் இஷான் கிஷான் தான் என்பதை தைரியமாக சொல்லி விடலாம்.
ஏனென்றால், அவரிடம் மூன்று விஷயங்கள் உள்ளது. அவர் ஒரு விக்கெட் கீப்பர். மேலும் இடதுகை பேட்ஸ்மேன். அதே போல, தொடக்க வீரராக, 5 அல்லது 6 ஆவது இடத்தில் மிடில் ஆர்டரிலும் கூட, இஷான் கிஷானை பயன்படுத்திக் கொள்ளலாம்' என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்