முதல் போட்டியிலேயே ஆண்டர்சனை ‘அலற’ வச்சவரு.. திடீரென ஓய்வை அறிவித்த ‘இந்திய’ ஆல்ரவுண்டர்.. வெளியான உருக்கமான அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரண்டரான ஸ்டூவர்ட் பின்னி, கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 194 ரன்களும், 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 230 ரன்களும், 3 டி20 போட்டிகளில் விளையாடி 35 ரன்களும் எடுத்துள்ளார். அதேபோல் டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 20 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்.
கடைசியாக 2016-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஸ்டூவர்ட் பின்னி விளையாடியுள்ளார். ஆனால் அடுத்து வந்த இளம் வீரர்களின் வருகையில் இந்திய அணியில் நீண்ட காலம் அவருக்கு இடம் கிடைக்காமல் இருந்தது. இதனால் ஐபிஎல் தொடரில் ஸ்டூவர்ட் பின்னி கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இதுவரை 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 880 ரன்களும், 22 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகளின் சார்பாக ஸ்டூவர்ட் பின்னி விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் முதல் தர மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (30.08.2021) ஸ்டூவர்ட் பின்னி அறிவித்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த பிசிசிஐ, இந்திய அணியின் கேப்டன்கள், கர்நாடகா கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு உருக்கமாக நன்றியை தெரிவித்துள்ளார்.
Former India and Karnataka all-rounder Stuart Binny announces his retirement from all forms of cricket. @DeccanHerald pic.twitter.com/L3EPZ2zTw2
— Madhu Jawali (@MadhuJawali) August 30, 2021
ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான மயந்தி லாங்கர், நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கணவரின் போட்டோவை பகிர்ந்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நாட்டிங்காமில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடியது.
அப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்டூவர்ட் பின்னியை (78 ரன்கள்) அவுட்டாக்க முடியாமல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் திணறினார். இவரது சிறப்பான ஆட்டத்தால் தோல்வியில் இருந்து மீண்டு அப்போட்டியை இந்தியா டிரா செய்தது. இந்த சூழலில் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பின்னி அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்