‘தோனி அவுட்டானதும் அழுக வந்துருச்சு’ ‘கண்ணீர அடக்கிட்டுதான் பேட்டிங் பண்ணேன்’ பிரபல வீரர் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை அரையிறுதியில் தோனி அவுட்டானதும் தனக்கு அழுகை வந்துவிட்டதாக சுழற்பந்து வீச்சாளர் சஹால் உருக்கமாக தெரிவித்தார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. லீக் சுற்றின் முடிவு வரை புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அப்போட்டியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா என முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அப்போது களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜா அதிரடியாக ஆடி அரைசதத்தை நிறைவு செய்து நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரும் திடீரென அவுட்டாகி வெளியேறினார். அப்போது இந்திய அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த தோனியின் மீது வெற்றிபெற வேண்டும் என்ற முழுப்பொறுப்பும் இறங்கியது. அதில் 49 -வது ஓவரில் தோனி ரன் அவுட்டாகி வெளியேறினார்.
அந்த தருணம் இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அதேபோல் வீரர்களும் இந்த வலியை சற்று கூடுதலாகவே அனுபவித்திருப்பார்கள். இந்நிலையில் தோனி அவுட்டான பிறகு பேட்டிங் செய்ய களத்திற்கு சென்ற தருணம் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார். அதில், ‘இது எனக்கு முதல் உலகக்கோப்பை. தோனி அவுட்டானதும் என்னால் அழுகையை கட்டுப்படுத்தமுடியவில்லை. கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிகொண்டுதான் பேட்டிங் செய்ய நான் களத்திற்கு சென்றேன்’ என சஹால் தெரிவித்துள்ளார்.