‘இதுக்கு மேட்ச் நடத்தாமலே இருக்கலாம்’!.. இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு.. முன்னாள் வீரர் கடும் விமர்சனம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-இலங்கைக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்து ஆகாஷ் சோப்ரா அதிர்ப்தி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13-ம் தேதி தொடங்க இருந்தது. ஆனால் இலங்கை வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டி ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, கடந்த 6-ம் தேதி நாடு திரும்பியது. தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய மொத்த இலங்கை வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்னெச்சரிக்கையாக இலங்கை ஏ அணி ஒன்றை உருவாக்கி பயிற்சி அளித்து வருகிறது. வரும் ஜூலை 18ம் தேதிக்குள் நிலைமை சீராக விட்டால், இந்திய ஏ அணியுடன் இலங்கையின் ஏ அணிதான் விளையாடும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘சமீபத்தில் நடந்த இங்கிலாந்து-இலங்கை தொடரை பார்த்தால், அந்நாட்டின் முதல் தர அணியே மிகவும் பலவீனமாக உள்ளது. அப்படி இருக்கையில் அந்நாட்டு 2-ம் தர அணியுடன் போட்டியை நடத்தினால் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள்.
இந்திய ஏ அணிக்கு எதிராக இலங்கையின் முன்னணி வீரர்களை கொண்ட அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம்தான். ஆனால் இலங்கை ஏ அணியை களமிறக்கினால் ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமே இருக்காது. ஏனென்றால் இலங்கையின் முதல் அணியை விட இந்தியாவின் ஏ அணி மிகவும் பலமாக உள்ளது’ என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இலங்கை அணி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்