‘மணிக்கு 151 கி.மீ வேகம்’!.. யாருங்க அந்த பையன்..? KKR-க்கு மரண பயத்தைக் காட்டிய இளம் வீரர்.. வியந்துபோன வில்லியம்சன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 26 ரன்களும், இளம் வீரர் அப்துல் சமத் 25 ரன்களும் எடுத்தனர்.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி, சிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 57 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், இப்போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவினாலும், அறிமுக வீரராக களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் (Umran Malik) அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசியுள்ள அவர் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.
#UmranMalik pic.twitter.com/g411fv3g1B
— Prabhat Sharma (@PrabS619) October 3, 2021
அதுமட்டுமல்லாமல் மணிக்கு 151.3 கிமீ வேகத்தில் பந்துவீசி கொல்கத்தா வீரர்களை மிரள வைத்தார். இதுதான் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிய அதிகபட்ச வேகம். களமிறங்கிய முதல் போட்டியிலேயே தனது முத்திரையை உம்ரான் மாலிக் பதித்துள்ளார். சர்வதேச வீரர்களே இரண்டு, மூன்று பந்துகளை மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீச திணறி வருகின்றனர்.
ஆனால் உம்ரான் மாலிக், தான் வீசும் ஓவரின் அனைத்து பந்துகளையும் மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீசி அசத்தினார். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ரயில்வே அணிக்கு எதிராக விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் உம்ரான் மாலிக்கின் பவுலிங்கைக் கண்டு வியந்துபோன ஹைதராபாத் அணியின் கேன் வில்லியம்சன் (Kane Williamson), போட்டி முடிந்தபின் அவரை பாராட்டியுள்ளார். அதில், ‘வலைப்பயிற்சியின் போது உம்ரான் மாலிக்கின் பந்துகளை நாங்கள் எதிர்கொண்டோம். அவர் வேகமாகவும், அதேவேளையில் கண்ட்ரோலாகவும் பந்து வீசினார். வரும் காலத்தில் உம்ரான் மாலிக் சிறந்த பந்துவீச்சாளராக நிச்சயம் வருவார்’ என கேன் வில்லியம்சன் அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்