ஏன் ரெண்டு நாளா ‘நட்டு’ விளையாடவே இல்ல?.. என்ன ஆச்சு அவருக்கு..? வார்னர் கொடுத்த ‘முக்கிய’ அப்டேட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக வீரர் நடராஜன் திடீரென விளையாடாமல் இருப்பதற்கான காரணத்தை ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து வருகிறது. அதில் ஹைதராபாத் அணி விளையாடிய முதல் 3 போட்டிகளும், வெற்றி பெறும் நிலை இருந்தும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ஹைதராபாத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மொத்தமாக 120 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.
அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 22 ரன்களும், தமிழக வீரரான ஷாருக் கான் 22 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை கலீல் அகமகது 3 விக்கெட்டுகளும், அபிஷேக் ஷர்மா 2 விக்கெட்டுகளும், புவேஷ்வர்குமார், ரஷித் கான் மற்றும் சித்தார்த் கௌல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி, 18.4 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 63 ரன்களும், டேவிட் வார்னர் 37 ரன்களும் அடித்தனர்.
கடந்த இரண்டு போட்டிகளில் தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கலீல் அகமது விளையாடி வருகிறார். இந்த நிலையில், போட்டி முடிந்தபின் நடராஜன் குறித்து பேசிய ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், ‘நடராஜனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஓய்வில் இருகிறார். ஒருவேளை ஸ்கேன் எடுக்கப்பட்டால், 7 நாட்கள் அவர் விளையாட முடியாது. அவர் திரும்பவும் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டி வரும். இதுதொடர்பாக பிசியோ ஆலோசனை நடத்தி வருகிறார். அவருக்கு ஸ்கேன் எடுக்க வேண்டி இருக்கும் என்றே தெரிகிறது’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ள நடராஜன், கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில், 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இதனை அடுத்து பெங்களூரு அணிக்கு எதிரான 2-வது போட்டியில், 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்