கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. அறிவித்த ஹர்பஜன் சிங்.. ரியாக்ட் செய்த ஸ்ரீசாந்த்.. ஸ்பெஷலாக சொன்ன ஒரு விஷயம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான ஹர்பஜன் சிங், தான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருந்தார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. அறிவித்த ஹர்பஜன் சிங்.. ரியாக்ட் செய்த ஸ்ரீசாந்த்.. ஸ்பெஷலாக சொன்ன ஒரு விஷயம்..

மொத்தமாக, 350 சர்வதேச போட்டிகளுக்கு மேல் ஆடிய அனுபவமுள்ள ஹர்பஜன் சிங், பல அசாத்திய சாதனைகளையும், தனது சுழற்பந்து வீச்சுத் திறனால் படைத்துள்ளார். குறிப்பாக, டெஸ்ட் போட்டியில், ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமை ஹர்பஜனுடையது தான். மேலும், டெஸ்ட் போட்டியில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் (417) உள்ளார்.

அது மட்டுமில்லாமல், இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையை வென்ற போதும், 2011 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பையை வென்ற போதும், இரண்டிலும் ஹர்பஜன் சிங் இடம் பிடித்திருந்தார். இந்திய அணிக்காக, கடந்த 2016 ஆம் ஆண்டு, தனது கடைசி சர்வதேச போட்டியில் (டி 20), இலங்கை அணிக்கு எதிராக ஆடியிருந்தார். அதன் பிறகு, சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்தார்.

இந்நிலையில், தற்போது மொத்தமாக ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் குறிப்பிட்ட ஹர்பஜன் சிங், 'அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு நாள் நிச்சயம் முடிவுக்கு வரும். எனது வாழ்க்கையில், அனைத்தையும் கொடுத்த கிரிக்கெட்டில் இருந்து இன்று நான் விடைபெறுகிறேன். இந்த 23 ஆண்டு கால பயணத்தை, அழகாகவும், மறக்க முடியாத தருணங்களாகவும் மாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், நீண்ட கால யோசனைக்கு பிறகு, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாக, தனது யூ டியூப் வீடியோவில் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். அவரின் முடிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், ஹர்பஜன் சிங்குடன் ஆடிய முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, உள்ளிட்ட பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹர்பஜன் சிங்குடன் விளையாடிய மற்றொரு சக வீரரான ஸ்ரீசாந்த், ட்விட்டரில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் பயணத்தில் அவர் பல்வேறு விவகாரங்களில் சிக்கியிருந்தாலும், யாரிடம் கேட்டாலும் அதில் முதலில் ஞாபகம் வருவது, ஸ்ரீசாந்துடனான சர்ச்சை தான். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, ஏற்பட்ட மோதலில், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஹர்பஜன் சிங் ஓங்கி அறைந்திருந்தார். இந்த சம்பவம், கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்திருந்தது.

தனது செயலுக்கு ஹர்பஜன் சிங் பிறகு மன்னிப்பும் கேட்டிருந்தார். பின்னர், இருவரும் பேசிக் கொண்டு நட்பாக இருந்தாலும், ஹர்பஜன் - ஸ்ரீசாந்த் பெயரை இணைத்துக் கேட்டாலே அந்த அறை விவகாரம் தான் ஞாபகத்திற்கு வரும். ஹர்பஜன் சிங் ஓய்வுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஸ்ரீசாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகில், இதுவரை விளையாடிய சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள். உங்களுடன் விளையாடியதும், உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டதும், என் வாழ்வில் மிகப் பெருமையான தருணம்.

உங்களின் அன்பான அரவணைப்பு எப்போதும் என் ஞாபக்கத்தில் இருக்கும். உங்கள் மீது மிகப்பெரும் மரியாதை மற்றும் அன்பு எப்போதும் உள்ளது' என மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

HARBHAJAN SINGH, SREESANTH, RETITEMENT, வாழ்த்து, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்

மற்ற செய்திகள்