‘இப்போ கோடைகாலம்’!.. WTC Final-ல் மைதானம் யாருக்கு ‘சாதகமாக’ இருக்க வாய்ப்பு..? மைதான வடிவமைப்பாளர் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ள இங்கிலாந்து மைதானம் எப்படி இருக்கும் என அதன் வடிவமைப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஐசிசி முதல்முறையாக நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக நியூஸிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பு, இங்கிலாந்து மைதானத்தில் விளையாடிய அனுபத்தை நியூஸிலாந்து அணி பெற்றுள்ளது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இந்திய அணியில் அனுபவம் மிக்க பல வீரர்கள் உள்ளதால், நியூஸிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான மைதானம் எப்படி அமைக்கப்பட உள்ளது என சவுத்தாம்ப்டன் மைதான வடிவமைப்பாளர் சைமன் லீ விளக்கமளித்துள்ளார். அதில், ‘சவுத்தாம்ப்டன் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. அதிலும் இந்த இறுதிப்போட்டிக்கான மைதானத்தை அமைக்கும் பணி எனக்கு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்.
இங்கிலாந்து மைதானங்களில் பொதுவாகவே வேகம் அதிகம் இருக்கும். ஆனால் இங்கு நிலவும் காலநிலை காரணமாக நாம் நினைத்தபடி மைதானத்தை அமைப்பது சற்று கடினமான விஷயம். தற்போது இங்கிலாந்தில் கோடை காலமாக உள்ளது. அதனால் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி வேகமாக வரும்படி, மைதானத்தை நிச்சயம் எங்களால் தயார் செய்ய முடியும்’ எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘மைதானத்தில் பந்து வேகமாக சென்று பவுன்ஸ் ஆனால், அது நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் என்னை பொருத்தவரை இந்த இறுதிப்போட்டியில், நியூஸிலாந்து அணிக்கு மைதானம் சாதகமாக அமைய பெரிய வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் தற்போதுதான் கிட்டத்தட்ட இதே மாதிரி இருக்கும் மைதானத்தில் விளையாடி இங்கிலாந்து அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளனர். இதை கணக்கில் வைத்து பார்க்கும்போது நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் நிச்சயம் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கும்’ என சவுத்தாம்ப்டன் மைதான வடிவமைப்பாளர் சைமன் லீ கூறியுள்ளார்.
ஒருவேளை இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், அது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகதான் இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ் போன்ற திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளதுதான் என தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்